Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் கேரளா: இடுக்கிக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் பாதிப்புக்குள்ளாகும் மதுரை

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் தடுக்கும் கேரளாவின் இடையூறுகள் தொடர்வதால் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் பெரியாறு அணை முக்கிய ஜீவாதாரமாக திகழ்கிறது. கேரளாவை நோக்கிப் பாயும் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையின் நீர்மட்டம் 152 அடியாகும். கடந்த 1924, 1933, 1940, 1943, 1961 மற்றும் 1977 ஆகிய ஆண்டுகளில் 152 அடி வரை தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் கடந்த கால் நூற் றாண்டாக அணை பலமாக இல்லை என்ற கேரள அரசின் குற்றச்சாட்டாலும்,வதந்திகளாலும் தமிழக அரசால் அணையின் முழு கொள்ளளவு வரை தண்ணீர் நிரப்ப முடியவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது தமிழக அரசின் சட்டப் போராட்டத்தால் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் பிறகு 2014, 2015, 2018 ஆண்டுகளில் மட்டுமே 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தும், கேரள அரசின் முட்டுக்கட்டையால் தற்போது 136 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடிகிறது.

வழக்கமாக உச்ச நீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடிக்கு மேல் நீர்மட்டம் சென்றால் மட்டுமே இடுக்கி அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், தற்போது 138 அடி உயரம் மட்டுமே தண்ணீர் இருக்கும் நிலையில் இடுக்கி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கேரள மாநிலத்தின் விவசாய தேவைக்கு துளியும் பயன்படுத்தப்படாது. இடுக்கி அணையில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு பின்னர் அரபிக் கடலுக்கு திறந்துவிடப்படும்.

பெரியாறு அணை தமிழக எல்லையோரத்தில் கேரளாவுக்குள் இருந்தாலும் அணையின் பராமரிப்பு, நீர் திறப்பு அதிகாரம், உரிமை தமிழகத்துக்கு மட்டுமே உள்ளது. இதுவரை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கோ அல்லது கேரளாவுக்கோ தண்ணீர் திறப்பதாக இருந்தால் தமிழக அமைச்சர்கள், தேனி ஆட்சியர் அல்லது அதிகாரிகளே தண்ணீரை திறந்துள்ளனர். கேரளா பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் மட்டும் செல்வார்கள். ஆனால், நேற்று வழக்கத்துக்கு மாறாக கேரளா அரசே தண்ணீரை திறந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெரியாறு அணையில் தமிழகத்தின் நீர் திறப்பு உரிமை பறிபோனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஒட்டுமொத்த விவசாயமும், குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்படும். இதில் மிக அதிகம் பாதிப்புக்குள்ளாவது மதுரை மாவட்டம்தான்.

மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த விவசாயமும், குடிநீர்த் திட்டங்களும் பெரியாறு, வைகை அணைகளை நம்பியே இருக்கிறது. தற்போது புதிதாக ரூ.1,020 கோடி மதிப்பீட்டில் பெரியாறு அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இத்திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இந்த திட்டத்தை நிறைவேற்ற கேரள அரசு ஒத்துழைக்குமா என்பது தெரியவில்லை.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தை, தேனி மாவட்டத்தின் பிரச்சினையாகவே தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கருதுவதே தற்போது தண்ணீர் திறப்பு அதிகாரம் பறிபோனதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் சுருளி ஆறு, வராகநதி, மூல வைகை நதி, கொட்டக்குடி ஆறு, மஞ்சளாறு உள்ளிட்ட பல்வேறு சிற்றாறுகள் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்தால் அந்த மாவட்ட விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரத்துக்கும் பிரச்சினை யில்லை. அதனால், தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் வராவிட்டாலும் சமாளித்துக் கொள்ளும்.

ஆனால், பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகள் பறி போனால் மதுரை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களே வறட்சிக்கு இலக்காகும். எனவே வைகை ஆறு நிரந்தரமாகவே வறட்சிக்கு இலக்காவதை தடுக்கவும், பெரியாறு அணையில் பறிபோகும் தமிழகத்தின் உரிமையை மீட்கவும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் இணைந்து, முல்லை பெரியாறு அணையில் கேரளா அரசின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x