

கடந்த 30 ஆண்டுகளாகவே பனைத்தொழில் கடும் நலிவை சந்தித்து வரும் நிலையில் கருப்பட்டி விலை சரிந்துள்ளதால் பனையேறும் தொழிலாளர்கள் வேதனையடைந்துள்ளனர். பனைத் தொழிலை பாதுகாக்க கருப்பட்டிக்கு அரசே ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 1 கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன.
இம்மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக பனைத் தொழில் ஒரு காலத்தில் இருந்து வந்தது. இதனால் இந்த மாவட்டங்களில் பனைத் தொழிலாளர்களும் அதிகம் இருந்தனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பனைத் தொழில் பிரதான தொழிலாக இருந்து வந்தது. உடன்குடி, வேம்பார் கருப்பட்டிக்கு இன்றளவும் உள்ள வரவேற்பே இதற்கு சான்று.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை விளாத்திகுளம், எட்டயபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய தாலுகாக்களில் பனைத் தொழிலாளர்கள் அதிகம். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக பனைத் தொழில் கடும் நலிவை சந்தித்து வருவதால் பனையேறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் தற்போது குறைந்து வருகிறது.
இதேநிலை இன்னும் சில ஆண்டுகள் நீடித்தால் பனைத் தொழிலே இல்லாமல் போகும் என கவலை தெரிவிக்கின்றனர், இத்தொழிலை நம்பியுள்ளவர்கள்.
அன்னை மக்கள் நல இயக்க தலைவர் அ. வரதராஜன் கூறியதாவது:
பனை தொழில் கேட்பாரற்று அழிந்து வருகிறது. இத்தொழில் கடினமானது என்பதாலும், கவுரவ குறைச்சலாக கருதப்படுவதாலும், தற்போதைய இளைஞர்கள் யாரும் இத்தொழிலை மேற்கொள்ள முன்வருவதில்லை. முந்தைய தலைமுறையினர் வேறு தொழில் தெரியாததால் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மேலும், இத்தொழில் செய்வோர் மீது கள் இறக்குவதாக சந்தேகித்து போலீஸார் வழக்கு போடுகின்றனர். இதனால் இந்த தொழிலை விட்டு ஏராளமானோர் மாற்று தொழில் தேடி சென்றுவிட்டனர்.
பாதுகாக்க வேண்டும்
பனைத் தொழில் ஆண்டுக்கு ஆண்டு நலிவடைந்து வருகிறது. பனைமரங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பனையேறும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்விக்கு சலுகைகள் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
பனங்கருப்பட்டி கடந்த காலங்களில் 10 கிலோ ரூ. 2 ஆயிரம் விலை போனது. தற்போது ரூ. 1,000 மட்டுமே விலை போகிறது. எனவே, அரசு பனங்கருப்பட்டிக்கு நிரந்தர ஆதார விலை வழங்க வேண்டும். 10 கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரம் நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றார் அவர்.