

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா பருவத்தில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க ரூ.427 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், இதுவரை ரூ.190 கோடி வங்கிகள் மூலமாக விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் கடந்த சம்பா பருவத்தின்போது, 10 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்தனர். இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிர் பாதிக்கப்பட்டாலோ, மகசூலில் பாதிப்பு ஏற்பட்டாலோ விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு பிரீமியம் செலுத்தி இருந்தனர்.
இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் வரலாறு காணாத வகையில் டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்ததால், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து வீணாகின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் நேரிட்ட மழை பாதிப்பை மத்திய குழுவினர் பார்வையிட்டு, சேதத்தை மதிப்பீடு செய்தனர். அப்போது, 3 லட்சம் ஏக்கர் நெல் பாதிக்கப்பட்டதாக மத்திய குழுவினருக்கு வேளாண்மைத் துறையினர் கணக்குகாட்டினர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.8 ஆயிரம் நிவாரண நிதியை வழங்கியது.
எனினும், விவசாயிகள் செலுத்திய பயிர்க் காப்பீடுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு, அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை காப்பீடு நிறுவனம் விடுவித்தது. அதன்படி, டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் எத்தனை சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது என கணக்கிட்டு, அதற்கு ஏற்ப விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் இழப்பீடு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஏ.ஜஸ்டின் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடியின்போது பாதிப்பு ஏற்பட்டதால், விவசாயிகள் செலுத்திய பயிர்க் காப்பீடுக்கான இழப்பீடு தொகையாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ.427 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை ரூ.190 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை தீபாவளி பண்டிகைக்குள் விவசாயிகளுக்கு கிடைத்து விடும். தமிழகத்திலேயே தஞ்சாவூர் மாவட்டத்துக்கு தான், பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.