சர வெடிக்கு உச்ச நீதிமன்றம் தடை: விதிமுறைகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை; விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை

சர வெடிக்கு உச்ச நீதிமன்றம் தடை: விதிமுறைகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை; விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை
Updated on
1 min read

தீபாவளி பண்டிகையை ஒட்டி சர வெடி வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உச்ச நீதிமன்றம் 29 ஆம் தேதி ( இன்று) அறிவித்த தீர்ப்பில், வரும் தீபாவளி பண்டிகை மற்றும் இன்ன பிற நிகழ்வுகளின் பொழுது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையுமில்லை.

ஆனால், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகள் சரவெடி மற்றும் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள் ஆகியவற்றை தயாரிக்க தடை விதித்தும், சேமிப்பு கிட்டங்கிகள் மற்றும் பட்டாசுக் கடைகளில் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவோ, கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ கூடாது.

பொதுமக்கள் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசு வகைகளை வெடிக்கக் கூடாது எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேற்படி உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிமுறைகளின்படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in