Published : 29 Oct 2021 06:04 PM
Last Updated : 29 Oct 2021 06:04 PM

அறிகுறி இல்லாமல்‌ வரும் ஆபத்தான நோய்: பக்கவாதத்தைத் தடுப்பது எப்படி?

பக்கவாதம்‌ பற்றிய ஆபத்தைச் சொல்லும்‌ உலக பக்கவாத விழிப்புணர்வு தினம்‌ இன்று அக்டோபர்‌ 29 அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சார்பில் பக்கவாதத் தடுப்பு நாள்‌ உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதையொட்டி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

''மனிதனுக்கு உண்டாகும்‌ நோய்களில்‌ ஆபத்தானது பக்கவாதம்‌. ரத்த நாளங்களில்‌ அடைப்பு உண்டாகி, மூளையின்‌ பாகங்கள்‌ செயல்‌ இழப்பதைதான்‌ பக்கவாதம்‌ என்கிறார்கள்‌. எந்தவித முன்‌ அறிகுறியும்‌ இல்லாமல்‌ வரக்கூடிய ஆபத்தான நோய்‌ இது. அதனால்தான்‌ இதை ஆங்கிலத்தில்‌ ஸ்ட்ரோக்‌ என்பார்கள்‌. மூளைக்கு செல்லும்‌ ரத்த ஓட்டத்‌ தடை, ரத்தக்‌ கசிவு போன்ற காரணங்களால்‌ பக்கவாதம்‌ ஏற்படுகிறது. இதனால்‌ உடலின்‌ பாகங்கள்‌ செயல்பாட்டை இழந்து அசைவின்றிப் போய்விடுகிறது.

அதிக அளவு ரத்த அழுத்தம்‌, தேவையற்ற கொழுப்புப் பொருள்கள்‌ உடலில்‌ தேங்குவது போன்றவைதான்‌ பக்கவாதம்‌ வரத் துணை புரிகிறது. மரபுரீதியாகக் கூட இந்த பக்கவாத நோய்‌ அதிகம்‌ உண்டாகிறது என்கிறார்கள்‌. ஒவ்வொரு ஆறு விநாடிக்கும்‌ ஒருவரைத் தாக்கும்‌ இந்த நோய்‌ ஆண்டுக்கு சுமார்‌ ஆறு கோடி பேரை வீழ்த்துகிறதாம்‌. அதில்‌ ஒன்றரை கோடி பேர்‌ மரணமும்‌ அனடைந்துவிடுகிறார்களாம்‌. நம்‌ நாட்டைப்‌ பொறுத்தவரை, ஆண்டுக்கு 6 லட்சம்‌ பேர்‌ வரை பக்கவாத நோயால்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌. அதில்‌ ஒன்றரை லட்சம்‌ பேர்‌ வரை பலியாகிறார்கள்‌ என்கிறது மருத்துவ உலகம்‌.

தலைவலி, பார்வை மங்குதல்‌, திடீர்‌ மயக்கம்‌, கை, கால்களில்‌ தளர்ச்சி, உணர்ச்சிக்‌ குறைவு, மரத்துப்‌ போதல்‌, பேச்சுக்குழறல்‌ போன்றவை இந்த நோய்‌ தாக்குவதைக்‌ காட்டும்‌ உடனடி அறிகுறியாகும்‌. ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்தல்‌, உடற்பயிற்சி, சீரான உணவு, சந்தோஷமான சூழல்‌, புகை, மது ஒழித்தல்‌ போன்றவை இந்த நோயை வரவிடாமல்‌ பாதுகாக்கும்‌. மேலும்‌, இதய நாள நோய்‌, சர்க்கரைக் குறைபாடு கொண்டவர்களைப்‌ பக்கவாதம்‌ தாக்கும்‌ ஆபத்து அதிகம்‌. எனவே, இவர்கள்‌ ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்‌.

ஆண்டுக்கு ஆண்டு பக்கவாத நோயாளிகளின்‌ எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. பக்கவாதத்தை ஒழிக்கவென்றே ஒவ்வொரு
ஆண்டும்‌ அக்டோபர்‌ மாதம்‌ 29-ம்‌ நாளை உலக பக்கவாத தினம்‌ என்று எல்லா நாடுகளும்‌ அனுசரித்து வருகின்றன. அதன்படி பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை எல்லோரும்‌ பெற்று நலம்‌ பெற இன்றைய நாள்‌ ஏதுவாக உதவுகிறது.

பக்கவாதத் தடுப்பு நாள்‌ உறுதிமொழி
-----------------------------

எனக்கோ, என்‌ உறவினர்கள்‌, அல்லது அருகில்‌ உள்ளவருக்கோ,

1. நிற்கும்‌ போது நிலைதடுமாற்றம்‌ ஏற்பட்டாலோ,
2. ஒரு கண்‌ அல்லது இரு கண்‌ பார்வையில்‌ பாதிப்பென்றாலோ,
3. ஒரு பக்க முகக்கோணல்‌ ஏற்பட்டாலோ,
4. ஒரு பக்க கை, கால்கள்‌ திடீரென பலவீனம்‌ ஏற்பட்டாலோ,
5. பேசுவதில்‌ சிரமம்‌ ஏற்பட்டாலோ

குறித்த நேரத்தில்‌ அதாவது நாலரை மணி நேரத்திற்குள்‌ சிகிக்சை பெறவேண்டிய அவசியம்‌ உணர்ந்து அருகிலுள்ள பக்கவாத சிகிச்சைக்கெனத் தயார்‌ நிலையில்‌ உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற உறுதிமொழி எடுத்துக்‌ கொள்கிறேன்‌.

இதன்‌ அவசியம்‌ உணர்ந்து மற்றவர்களுக்கும்‌ தேவையான விழிப்புணர்வை நான்‌ ஏற்படுத்துவேன்‌.
பக்கவாதத்தின்‌ முக்கிய காரணிகளான புகை பிடித்தல்‌ மற்றும்‌ மது அருந்துதலைத் தவிர்ப்பேன்‌.
ரத்த அழுத்தம்‌ மற்றும்‌ சர்க்கரை அளவுகளைக் கட்டுப்பாட்டில்‌ வைப்பேன்‌.
தினமும்‌ உடற்பயிற்சி செய்தல்‌ மற்றும்‌ ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பேன்''‌.

இவ்வாறு தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x