

பக்கவாத நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் காப்பாற்றிவிடலாம் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக். 29) உலக பக்கவாத விழிப்புணர்வு நாளை முன்னிட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வுக் கையேட்டை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தமிழ்நாடு சுகாதாரச் சீரமைப்புத் திட்டத்தின் சார்பில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக பக்கவாத விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகத்தில் ஒரு பெரிய அச்சுறுத்தலைப் பக்கவாதம் நோய் ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதிலும் ஆண்டொன்றுக்குப் பக்கவாத நோயால் 6 கோடி பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 1 கோடியே 50 லட்சம் அளவுக்கு இறப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 6 லட்சம் பேர் இந்நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்நோயினால் இறந்துவிடுகின்றனர்.
பக்கவாத நோயினால் பாதிக்கப்படுபவர்கள் 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்று தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். மூளை நரம்புகள் செயலிழந்து, ரத்த நாளங்களில் ஏற்படுகிற அடைப்பு, மற்றும் உடைப்பு ஆகியவற்றால் ஏற்படுகிற பாதிப்புகள் பக்கவாதம்தான் என்பதை உணர்ந்து, அதற்கான அறிகுறிகளாகச் சொல்லப்படுகிற தலைவலி, பார்வை மங்குதல், திடீர் மயக்கம், கை, கால்களில் தளர்ச்சி, உணர்ச்சிக் குறைவு, மரத்துப்போதல், பேச்சுக் குளறுதல் இதில் ஏதாவது ஒன்று ஏற்படுகிறபோதுதான் மருத்துவமனைக்குச் செல்லுதல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குதான் உலகம் முழுவதிலும் உலக பக்கவாத நோய் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் அல்ட்டிபேஸ் என்கிற மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருப்பில் இருக்கிறது. மேற்குறிப்பிட்ட பக்கவாத நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் காப்பாற்றிவிடலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
இந்தப் பக்கவாத நோய் பாதிக்கப்பட்டு ஒரு தடவை அதற்கான மருந்தைப் பயன்படுத்துவதால் அரசுக்கு ரூ.35 ஆயிரம் செலவாகிறது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் குறிப்பிட்ட அரசு வட்டார மருத்துவமனைகளில் இம்மருந்து இருப்பில் இருக்கிறது.
தமிழக மக்கள் பக்கவாத நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 4 மணி நேரத்துக்குள் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதேபோல், இந்நோய் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் இவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து அவர்கள் உயிரைக் காப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றிருக்கிறது.
அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையின் சார்பில் 10 வாகனங்கள் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பக்கவாத நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பண்டிகைக் காலங்களில் எப்படி பாதுகாப்புடன் கொண்டாடுவது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுள்ளது. தீக்காயங்களுக்கு சிறப்பு சிகிச்சை வார்டுகளும் ஏற்படுத்த மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.