

சென்னை ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையைச் சரியாகப் பராமரிக்காத கண்காணிப்பாளர், மருத்துவர் ஆர்.வெங்கடேஷ்வரியைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 29) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை, ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அம்மருத்துவமனை சரியான பராமரிப்பு இன்றியும், சுகாதாரச் சீர்கேடு அடைந்து காணப்பட்டதற்கு, அம்மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் வெங்கடேஷ்வரியிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்குச் சரியான விளக்கத்தை அளிக்காமலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாகவும் புகார்கள் பெறப்பட்டன.
எனவே, அமைச்சர் உடனடியாக மருத்துவக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ்வரியைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.