சிறுகச் சிறுகச் சேமித்தால் மலையளவு மகிழ்ச்சி காணலாம்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்
Updated on
1 min read

பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்கொரு அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் இன்று (அக். 29) வெளியிட்ட அறிக்கை:

"சிக்கனத்தின் முக்கியவத்துவத்தையும், சேமிப்பின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் பொருட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் நாள் 'உலக சிக்கன நாளாக' நாடு முழுவதும் கொண்டாடப்படுவது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

'அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்'

எனும் உலகப் பொதுமறை தந்திட்ட வள்ளுவரின் வாக்குக்கிணங்க, பொருளின் அளவு அறிந்து செலவு செய்யாதவன் வாழ்க்கை நன்றாக இருப்பது போல் தோன்றினாலும், பின்னர் இல்லாது அழிந்துவிடும். எனவே, சிக்கன நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து, சிக்கனமாக வாழ்ந்து, வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பதையே இந்த 'உலக சிக்கன நாள்' வலியுறுத்துகிறது.

'சிறு துளி பெரு வெள்ளம்', 'சிறுகக் கட்டி பெருக வாழ்' போன்ற பொருள் பொதிந்த இப்பொன்வரிகள் சேமிப்பின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைகளைக் கருதி சேமிப்பது மிகவும் அவசியம்.

இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பாகும். அஞ்சலகச் சேமிப்பு முதுமைக் காலத்தில் தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. எதிர்கால வாழ்க்கை பாதுகாப்பாக அமைந்திட ஒவ்வொரு குடும்பமும் சேமித்திடும் பழக்கத்தைத் திறம்பட வளர்த்துக் கொள்ள வேண்டும். அஞ்சலகத்தில் செயல்படுத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் முதலீடு சிறந்த பாதுகாப்பைத் தருகிறது.

மேலும், சிறுகச் சிறுகச் சேமிக்கும் இத்தொகை பன்மடங்கு பெருகி அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் பெரிதும் பயன்படுகிறது.

எனவே, இந்த உலக சிக்கன நாளில், தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த, வீட்டுக்கொரு அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை (Recurring Deposit) அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடங்கி, சேமித்துப் பயன் பல பெற்றிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in