

குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகளை முறையாகப் பராமரிக்காமல், கவனக்குறைவாகச் செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அங்கன்வாடி முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படாததால், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கான அரிசி, பருப்பு, முட்டை ஆகியவை மாணவர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், தொண்டமாங்கிணம் ஊராட்சி கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக முட்டைகள் வந்துள்ளன. இவற்றில் பல முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தன.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் இன்று (அக். 29) கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகளை முறையாகப் பராமரிக்காமல், கவனக்குறைவாகச் செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடமும் உரிய விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.