ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை 9 ஆண்டுகளாக இபிஎஃப் அலுவலகத்தில் ஜிப்மர் கட்டாமல் முறைகேடு: தினக்கூலி ஊழியர்கள் தொடர் போராட்டம்

படம்: எம்.சாம்ராஜ்.
படம்: எம்.சாம்ராஜ்.
Updated on
1 min read

ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை, 9 ஆண்டுகளாக இபிஎஃப் அலுவலகத்தில் கட்டாமல் முறைகேடு செய்துள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை மீது குற்றம் சாட்டி தினக்கூலி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மரில் தினக்கூலி ஊழியர்கள் 576 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் உணவு வழங்குதல், வெளிப்புற சிகிச்சை, உள்புற சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை தங்கள் பணிகளைப் புறக்கணித்து ஜிப்மர் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டத்தைத் தொடங்கினர்.

போராட்டம் தொடர்பாக தினக்கூலி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செல்லதுரை, பாஸ்கரன், சிவசங்கரன் ஆகியோர் கூறுகையில், "தினக்கூலி ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட குறைவான ஊதியம்தான் தருகின்றனர். அதில் இபிஎஃப்க்கு சராசரியாக ரூ.2000 பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், இபிஎஃப் நம்பர் எங்களுக்குத் தரப்படவில்லை.

நிர்வாகம் தராததை விசாரித்தபோது, அத்தொகையை 9 ஆண்டுகளாக இபிஎஃப் அலுவலகத்தில் கட்டாதது தெரியவந்தது. பலமுறை கோரியும் இபிஎஃப் நம்பர் தராததால் ஜிப்மர் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் தொடங்கியுள்ளோம்.

நிர்வாகம் தரப்பில் இபிஎஃப் நம்பரை எங்கள் அனைவருக்கும் தரவேண்டும். அதில் 9 ஆண்டுகளாக எங்களிடம் பிடித்தம் செய்த தொகையைச் செலுத்தியிருக்கவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்" என்று குறிப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in