

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பான அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் இன்று நடக்கிறது. இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையம், வரும் 2022-ம் ஆண்டு ஜன.1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அக்.29-ம் தேதி (இன்று) நடக்கிறது.
இக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளின்போது படிவங்களின் மீதுதீர்வு மேற்கொள்ளுதல் மற்றும் அதன் அட்டவணை குறித்து தெரிவிக்கப்படும். அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் பரிசீலிக்கப்படும். இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு திருத்தப் பணிகளுக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது.
அதன்படி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவ.1-ம் தேதி வெளியிடப்படும். நவ.30-ம்தேதி வரை கோரிக்கை மற்றும்மறுப்பு தொடர்பாக விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம்கள் நவ.13, 14மற்றும் 27, 28 ஆகிய சனி, ஞாயிறுகளில் நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டுஜன.5-ம் தேதி வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும், வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்கலாம். அவர்கள், சிறப்பு முகாம்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தங்கள் மற்றும் பிறவற்றைஅடையாளம் காண உதவலாம்.வாக்குச்சாவடி நிலைமுகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்த, இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி, தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில்தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.