

வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த் தும் வகையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார்.
சென்னை மாவட்டத்தில் கடந்த 2 தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததையொட்டி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது மக்கள் அதிகமாகக் கூடும் இடங் களில் பல்வேறு தேர்தல் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 16 சட்ட மன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு, குறைவாக இருந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு விழிப்புணர்வுப் பேரணிகள், மனித சங்கிலி, மகளிர் மற்றும் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசு வழங்குதல், கலை நிகழ்ச்சி கள் நடத்துதல், துண்டுப் பிரசுரங் கள் வழங்குதல், விளம்பரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் வைத்தல் போன்ற விழிப்புணர்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
நேற்று சேப்பாக்கம்-திருவல் லிக்கேணி தொகுதி மெரினா கடற் கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கும் பலகைகளில் வாக்களிப்போம் என்பதற்கான உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜி.கோவிந்தராஜ் தொடங்கி வைத்து பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கினார். தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் துணை ஆணையர் (கல்வி) ஆஷியா மரியம், மத்திய வட்டார துணை ஆணையர் சுபோத் குமார் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.