மதுரைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின் கீழடியில் இன்று ஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை வருகிறார். கீழடி அகழாய்வு நடந்த இடத்தை அவர் பார்வையிடுகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது ஜெயந்தி, 59-வது குரு பூஜை விழா நேற்று தொடங்கியது. இவ்விழா நாளை (அக்.30) வரை நடக்கிறது.
நாளை அரசு விழாவாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் இன்று (அக்.29) காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர் கார் மூலம் மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார்.
சிவகங்கை மாவட்ட கீழடி தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் கொந்தகையில் ரூ.12.21 கோடியில் அகழ் வைப்பகம் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது இது தவிர கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு நடந்த இடங்களில் குழிகளை மூடாமல், அதை பொதுமக்கள் பார்க்க வசதியாக திறந்தவெளி அகழ் வைப்பகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணியளவில் கீழடி வருகிறார். அங்கு, 7-ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தையும், அகழ் வைப்பகம் கட்டும் பணியையும் பார்வையிட உள்ளார். பின்னர் அரசு சுற்றுலா மாளிகைக்கு திரும்பும் முதல்வர், இரவு அங்கு தங்குகிறார்.
தேவர் நினைவிடம்
முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னுக்கு நாளை செல்கிறார். வழியில் காலை 8 மணி அளவில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கும், தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கும் அவர் மாலை அணிவிக்கிறார். பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் காலை 10 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். பிறகு அவர் கார் மூலம் மதுரை வந்து, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள், சசிகலா உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் தேவர் ஜெயந்திக்கு வருவதால் மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
