சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் முடித்துவைப்பு

சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் முடித்துவைப்பு
Updated on
1 min read

தமிழக 14-வது சட்டப்பேரவையின், 11 வது கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டதாக சட்டப் பேரவை செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்றதும், 14-வது சட்டப்பேரவை அமைந்தது. இப்பேரவையின் முதல் கூட்டம் 2011-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி தொடங்கியது. அந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். தொடர்ந்து, 4 ஆண்டுகளில் 10 கூட்டத்தொடர்கள் நடந்து முடிந்தன.

இந்தாண்டு தொடக்கத்தில் 11 வது கூட்டத் தொடர் தொடங்கியது. இதன் முதல் கூட்டத்தை, ஜனவரி 21-ம் தேதி வழக்கம் போல் ஆளுநர் கே.ரோசய்யா தனது உரையுடன் தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் அவை அலுவல்கள் நடந்தன.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியதை அடுத்து, இடைக்கால பட்ஜெட்டை, அதிமுக அரசு பிப்ரவரி 16-ம் தேதி தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் மீதான விவாதம் 20-ம் தேதி வரை நீடித்தது. அன்றுடன் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 14-வது சட்டப் பேரவையின் 11- வது கூட்டத்தொடர், முடித்து வைக்கப்பட்டதாக, தமிழக சட்டப்பேரவை செயலர் அ.மு.பி.ஜமாலுதீன் நேற்று அறிவித் துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில், நடந்த 11 கூட்டத் தொடர்களில் சட்டப்பேரவை மொத்தம் 191 நாட்கள் இயங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in