

கோவையைச் சேர்ந்த திருநங்கைகள் வரைந்த ஓவியங்கள் அமெரிக்காவில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்த தேர்வாகியுள்ளன.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கல்கி சுப்ரமணியம். திருநங்கையான இவர், ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல், பேச்சாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத் திறன் கொண்டவர். பெண்கள் மற்றும் திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக அறக்கட்டளை நடத்தி வருகிறார்.
மேலும், திருநங்கைகளுக்கு படைப்பாற்றலை ஊக்குவித்து, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்த கலை மற்றும் ஓவியப் பயிற்சியை கடந்த 5 ஆண்டுகளாக அளித்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பல்கலைக் கழகம் சார்பில் திருநங்கைகள் சுயமரியாதை என்ற பெயரில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில், கல்கி சுப்ரமணியம் மற்றும் அவரிடம் ஓவியப் பயிற்சி பெற்றவர்கள் என மொத்தமாக 8 பேரின் ஓவியங்கள் காட்சிப்படுத்த தேர்வாகியுள்ளன.
இதுகுறித்து கல்கி சுப்ரமணியம்கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:அமெரிக்காவில் இந்தகண்காட்சியானது பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாகவும் மற்றும்இணையவழியிலும் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி, 2022-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக உலகெங்கும் இருந்து திருநங்கைகளிடமிருந்து ஓவியங்களை அனுப்பி வைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. நான் வரைந்த மற்றும் என்னிடம் பயிற்சி பெற்ற 6 திருநங்கைகள், ஒரு திருநம்பி வரைந்த ஓவியங்களைத் தேர்வு செய்து அனுப்பி வைத்தேன். அவை அனைத்தும் கண்காட்சியில் காட்சிப்படுத்த தேர்வாகியுள்ளன. மொத்தமாக 35 பேரின் ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கண்காட்சியில் பங்கேற்க எனக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டு திருநங்கைகளுக்கு கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் ஆகும். இந்த முயற்சியைத் தொடர்ந்து வளர்த்தெடுக்க பொள்ளாச்சியில் திருநங்கைகளுக்கான கலைக் கூடம் அமைக்க முயற்சி செய்து வருகிறேன். யாரும் இடம் தர முன் வரவில்லை. ஓவியங்கள் வரையவும், காட்சிப்படுத்தவும் ஒரு கலைக்கூடம் அமைக்க தமிழக அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.