Published : 29 Oct 2021 03:10 AM
Last Updated : 29 Oct 2021 03:10 AM

பறவைகளுக்கு சிகிச்சையளிக்க பிரத்யேக மருத்துவமனை: கோவை மாவட்ட வனத்துறை சார்பில் தயாராகிறது

பறவைகளுக்கு சிகிச்சை அளிக்க கோவையில் வனத்துறை சார்பில் பிரத்யேக மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வடகோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மாவட்ட வனஅலுவலர் அலுவலக வளாகத்தில் நோயுற்ற, காயம்பட்ட பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பறவைகளுக்கான மறுவாழ்வு மையம், ‘அனிமல் ரெஸ்கியூயர்ஸ்’ என்ற தன்னார்வ அமைப்பின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் தற்போது பறவைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு, எக்ஸ்-ரே பரிசோதனை, பறவைகளுக்கு சிகிச்சை அளிக்க மயக்கமருந்து செலுத்தும் கருவி, இருதய துடிப்பை தெரிந்துகொள்ளும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன. தற்போது இங்கு பறவை குஞ்சுகளை இதமான வெப்பநிலையில் பராமரிக்கும் இயந்திரம் மற்றும் தமிழகத்தில் முதல்முறையாக, உயிரிழந்த பறவைகளை எரியூட்டும் இயந்திரம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன.

தற்போது பறவைகளுக்கான மறுவாழ்வு மையத்தில் காயம்பட்ட பறவைகளுக்கு வன கால்நடை மருத்துவர்கள், தன்னார்வலர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த மாதம் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே ‘கிரே ஹெட்டட் ஃபிஷ் ஈகிள்’ எனும் பறவை மீட்கப்பட்டது. இறக்கையில் காயம்பட்ட அந்த பறவைக்கு, இந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்டது.

கோவை மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார் கூறும்போது, “இந்த மையத்தில் உள்ள எரியூட்டும் இயந்திரத்தின் மூலம் நோயுற்றும், விபத்தாலும் உயிரிழந்த 40 பறவைகள் இதுவரை எரியூட்டப்பட்டுள்ளன. இதில் பெரும் பாலானவை மயில்கள். வீடுகளில் கிளிகள் உட்பட பல்வேறு பறவைகள் வளர்க்க தடை உள்ளது. இது தெரியாமல் பலர் வீடுகளில் கிளிகள் வளர்த்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து மீட்கப்படும் கிளிகள் உள்ளிட்ட பறவைகள் இந்த மையத்துக்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதுதவிர,சூலூர் பகுதியில் இருந்த அரியவகை மஞ்சள் தலை பாறு கழுகுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

மறுவாழ்வு மையத்தில் பறவைகளை பராமரித்துவரும் தன்னார்வலர் கூறும்போது, “இந்த மறுவாழ்வு மையத்தில் தற்போது 100 கிளிகள், 4 மயில்கள், 7 புறாக்கள், 3 குயில்கள், காகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த மையத்தில் உள்ள ஒரு காகத்துக்கு செயற்கை கால் பொருத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x