

தொழிலாளர்களைத் தக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், தீபாவளி போனஸ் வழங்க கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறுந்தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர, பெரிய நிறுவனங்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேல் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆட்டோமொபைல் தொடங்கி பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்கள் உற்பத்தி வரை அனைத்து வகைப்பட்ட தொழில்களும் இங்கு உள்ளன.
கோவை மாவட்டத்தில் மொத்த முள்ள தொழில் நிறுவனங்களில் சரிபாதி குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் ஆகும். தீபாவளி பண்டிகை வரும் 4-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு முந்தைய நடைமுறைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
குறுந்தொழில் நிறுவனங்களைப் பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழிலாளர் களுக்கு திருப்திகரமான போனஸ் வழங்கப்பட்ட நிலை இருந்தது. ஆனால் நடப்பாண்டு அடிப்படை சதவீத போனஸ் கூட வழங்க இயலாத நிலையில் இருப்பதாக குறுந்தொழில் நிறுவன உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டாக்ட்) மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் கோவையில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களில் இருந்த போனஸ் நிலையே வேறு. குறுந்தொழில் நிறுவன தொழிலாளர்களுக்கு 16 முதல் 22 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டு நிலை அவ்வாறு இல்லை. அடிப்படை சதவீதமான 8.33 சதவீதம் கொடுக்கவே அனைவரும் திணறி வருகிறோம்.
அதற்கு காரணம், முந்தைய தீபாவளி பண்டிகையின்போது குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்தன. மூலப்பொருட்களின் விலையும் இந்தளவுக்கு உயரவில்லை. நடப்பாண்டு மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஆர்டர்களை அளிக்கும் பெரிய நிறுவனங்கள், ஆர்டர் செய்வதைத் தள்ளி வைத்துள்ளன.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் கிலோ ரூ.138-க்கு விற்கப்பட்ட குறிப்பிட்ட ரக இரும்பு ராடுகள் தற்போது ரூ.200-க்கு விற்கப்படு கின்றன. காப்பர் விலை ரூ.600-லிருந்து ரூ.1000-ஆக உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளன. விலை உயர்வுக்கு முன் எடுக்கப்பட்ட ஆர்டர்களை தற்போது செய்தால் நஷ்டம் ஏற்படும். தற்போதைய சூழலுக்கு ஏற்ப விலையை உயர்த்த வேண்டியது வரும். விலையை உயர்த்தினால் பொதுமக்களிடம் வாங்கும் திறன் குறையும் என முதலீடு செய்வோர் அச்சப்படும் நிலை உள்ளது.
இவ்வாறு சங்கிலித் தொடர் போல ஏற்படும் பாதிப்பில் பெரிதாக பாதிக்கப்படுவது ‘ஜாப் ஆர்டர்’ செய்யும் குறுந்தொழில் நிறுவனங்கள் மட்டுமே. ஆர்டர்கள் இருந்தால் மட்டுமே வருமானம்.
அதே நேரத்தில் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் குடும்ப நலன் மற்றும் தொழிலாளர்களைத் தக்க வைக்க வேண்டி இருப்பதால் போனஸ் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் வெளியில் நிதி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் கடன் வாங்கும் நிலையில் குறுந்தொழில் முனைவோர் உள்ளனர்.
தமிழக அரசு தரப்பில் தொழில் நிறுவனங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மூலப்பொருட்கள் விலை உயர்வு என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இத்தனை கோரிக்கைகள் விடுத்தும் மூலப்பொருட்கள் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு போனஸ் அவசியம்
இதுகுறித்து, சிஐடியு மாவட்டத் தலைவர் பத்மநாபன் கூறும்போது, “மனித வாழ்வில் பண்டிகைகள் மிகவும் முக்கியமானவை என்பதோடு குடும்பங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவை. தீபாவளி பண்டிகைக்கு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது என்பது நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த ஒரு அம்சமாகும்.
தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு, அவர்கள் பண்டிகைக்கு புத்தாடைகள் முதல் அனைத்தும் வாங்கினால் மட்டுமே பொருளாதார சுழற்சி ஏற்படும். நஷ்டமடைந்த நிறுவனங்கள் என்றாலும் 8.33 சதவீதம் வழங்க வேண்டும். எனவே, அனைத்து நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு விரைந்து போனஸ் வழங்க வேண்டும்” என்றார்.