

வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வது, சிறு மற்றும் குறு விவசாயிகளின் வருவாய்க்கும் வளர்ச்சிக்கும் வழிசெய்வது ஆகியவற்றில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 2014 முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழகத்தில் 318 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பெரும்பாலான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறுதானியங்களான தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு போன்றவற்றில் இருந்து அரிசி, மாவு, சத்துமாவு, சப்பாத்தி மாவு, பிஸ்கட் உள்ளிட்ட குக்கீஸ் வகைகளைத் தயாரிக்கின்றன. கரோனா பாதிப்பைத் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்பதால் ரசாயன கலப்பு இல்லாத உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கிறது. அதனால் விற்பனை அதிகரித்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் ஆண்டு விற்றுமுதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்டம், கள்ளிப்பட்டியில் உள்ள கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைமை செயல் அதிகாரி கவிதா கூறியதாவது:
எங்கள் நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகள் ஆகின்றன. ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 51 கிராமங்களைச் சேர்ந்த 1,000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தலா ரூ.1,000 வீதம் ரூ.10 லட்சத்தில் நிறுவனத்தைத் தொடங்கினோம். எங்களது தயாரிப்புகள் ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகாவிலும் விற்பனையாகிறது. மதிப்பு கூட்டிய சிறுதானிய பொருட்களுடன், பாரம்பரிய நெல் ரகங்களையும் விற்பனை செய்கிறோம்.
எங்கள் பகுதியின் பிரதான பயிர் வாழை, மஞ்சள், கரும்பு. ஐரோப்பிய நாடுகளுக்கு செவ்வாழை ஏற்றுமதி செய்ய மாதிரி அனுப்பி, ஆர்டரை உறுதி செய்துள்ளோம். கரோனா காரணமாக கண்டெய்னர்கள் கிடைக்க தாமதமாகிறது. ஆண்டு முழுவதும் (52 வாரம்) ஈரோட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வாழை ஏற்றுமதி செய்யத் தயாராக உள்ளோம். எங்கள் நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் ரூ.1.50 கோடி ஆகும் என்றார்.
புதுக்கோட்டை இயற்கை விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாக இயக்குநர் ஆ.ஆதப்பன் கூறியதாவது:
சிறுதானியங்கள், பராம்பரிய நெல் ரகங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பாலிஷ் இல்லாத அரிசி, மாவு, முறுக்கு, மிக்ஸர், அதிரசம், சீடை, ரிப்பன் பக்கோடா, செட்டிநாடு பலகாரமான மணக்கோலம் தயாரிக்கிறோம். நெய், முந்திரிப்பருப்பு சேர்த்து கம்பு, ராகி, மாப்பிள்ளை சம்பா, உளுந்து, பாசிப்பயறு, தினையில் இருந்து 7 வகையான லட்டு மற்றும் சத்துமாவு, புட்டு மாவு, தோசை மாவு, இடியாப்ப மாவும் விற்பனை செய்கிறோம்.
வரகு, குதிரைவாலி, கம்பு, சாமை, தினை என எல்லாவற்றிலும் அவல் செய்கிறோம். தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி உட்பட 10 மாநிலங்களில் எங்கள் பொருட்கள் விற்கப்படுகின்றன. அந்தமானுக்கும் அனுப்புகிறோம். கடந்த ஆண்டு எங்களது விற்றுமுதல் ரூ.2.05 கோடி. இந்த ஆண்டு விற்றுமுதல் ரூ.1.45 கோடி அதிகரித்து ரூ.3.50 கோடியாக உள்ளது. எங்களது முறுக்கு, சீடை, மிக்ஸர் 5 ஆயிரம் பாக்கெட்டுகள் வரும் 26-ம் தேதி கத்தார் நாட்டுக்கு அனுப்ப ஆர்டர் கிடைத்துள்ளது என்றார்.