உரிமம் பெறாமல் நடைபெறுவதை கண்டறிய குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை விடுதிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

உரிமம் பெறாமல் நடைபெறுவதை கண்டறிய குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை விடுதிகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

Published on

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து கட்டணம், கட்டணமில்லா முதியோர் இல்லங்களும், தனியார், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து முதியோர் இல்லங்களும், முதியோருக்கான குத்தகை விடுதிகள் மற்றும் வாடகை விடுதிகளும் 2009-ம் ஆண்டின் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.

இதேபோல், மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின் படி விடுதிகள் நடத்துபவர்கள் உரிமம் பெற்று கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால், தமிழகம் முழுவதும் பல விடுதிகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவை முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வருகின்றன. இதனால், பெண்களும், முதியோரும் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இவற்றுக்கு தீர்வு காண அனைத்து விடுதிகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவை கடந்த ஜூலை 31-ம் தேதிக்குள் கட்டாயம் பதிவு மற்றும் உரிமம் பெற வேண்டும் என்று சமூகநலத் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, உரிமம் மற்றும் பதிவு செய்யாதவர்கள் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்து வந்தனர். இருப்பினும், முழுமையாக அனைத்து விடுதிகளிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வந்து சேரவில்லை. எனவே, உரிமம் பெறாமல் நடைபெறுவதை கண்டறிய குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கள ஆய்வு மேற்கொள்ள மாவட்ட சமூகநல அதிகாரிகளுக்கு சமூகநலத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, சமூகநலத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “விடுதிகள், முதியோர் இல்லங்கள் உள்ளிட்டவற்றை பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்காக உரிமையாளர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இருப்பினும், 100 சதவீதம் அனைத்து விடுதிகளின் உரிமையாளர்களும் விண்ணப்பிக்கவில்லை. இதுமட்டுமின்றி, புதிது புதிதாக விடுதிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

எனவே, உரிமம் பெறாமல் இருக்கும் விடுதிகளை கண்டறிய குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை கள ஆய்வுகளை மேற்கொள்ள மாவட்ட சமூகநல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்களும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in