Published : 29 Oct 2021 03:11 AM
Last Updated : 29 Oct 2021 03:11 AM

கரோனா பணிக்காக அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகை வழங்க அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்: சென்னையில் 100 பேர் பங்கேற்பு

அரசு மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு டாக்டர்கள் சங்க மருத்துவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்

சென்னை

அரசு மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019-ல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்கிடையே, ஊதிய உயர்வுக்கு பதிலாக மருத்துவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அரசு அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில், அரசின் அந்தஅறிவிப்பு இன்னும் செயல்படுத்தப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை உடனே அமல்படுத்தக் கோரியும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர்கள் சங்க மாநில செயலாளர் ரவிசங்கர் கூறியதாவது:

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், கரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவர்களது தகுதிக்கு ஏற்ப சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்கான அரசாணை 293-ஐ வெளியிட்டார். அந்த அரசாணை இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

இதுதொடர்பாக பலமுறை தெரிவித்தும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆணையை உடனே அமல்படுத்த வேண்டும்.

அதேபோல, கரோனா ஊக்கத் தொகை அறிவித்து 4 மாதங்கள் ஆகிறது.அதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, கரோனா தொடர்பான பணியில் ஈடுபட்ட அனைத்து மருத்துவர்களுக்கும் உடனே ஊக்கத் தொகைவழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பில்மருத்துவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x