

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விரைவில் 6 புதிய நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 60-ல் இருந்து 75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 34 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். 41 பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால் வழக்குகளின் எண்ணிக்கையும் பெருமளவில் தேக்கமடைந்ததையடுத்து, காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் முதற்கட்டமாக கடந்த ஆண்டு 6 வழக்கறிஞர்கள் மற்றும் 3 மாவட்ட நீதிபதிகள் அடங்கிய 9 பேர் பட்டியலை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவான கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்நிலையில் இந்த 9 பேரில் தற்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான வி.பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணகுமார் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பொன்.கலையரசன், சென்னை சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதியாக இருந்து கடந்தாண்டு ஓய்வுபெற்ற பி.கோகுல்தாஸ் ஆகிய 6 பேரையும் புதிய நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததும், இவர்கள் 6 பேரும் முறைப்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக விரைவில் பதவியேற்பர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்கள் பாரம்பரிய முறைப்படி இந்தி தேவநாகரி மொழியில் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அதன்படி, அதற்கான ஆவணங்களில் இன்று இவர்கள் 6 பேரும் கையெழுத்திட்டு, அதை குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் பி.கோகுல்தாஸ் மட்டும் தனது 60-வது வயதில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 6 பேரும் 62 வயது வரை இந்த பதவியில் நீடிப்பர்.