

நவ.1-ல் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, ஆய்வுக் கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாக அரங்கத்தில் இன்று (அக். 28) நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
பின்னர், ஆணையர் வெ.பழனிகுமார் பேசியதாவது:
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடுநிலையுடனும், பாதுகாப்புடனும் நடத்திடும் வகையில் தேர்தல் பணிகளில், தேர்தல் கண்காணிப்புப் பணிகள், தேர்தல் நன்னடத்தை விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை தேர்தல் தொடர்புடைய முக்கியப் பணிகளாகும்.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புறத் தேர்தலின் போது, சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில், தொடர் கண்காணிப்புப் பணிகளை காவல்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.
நவம்பர் 1-ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
வாக்குப்பதிவு நடக்கும் சமயத்தில் வாக்குப்பதிவு மையங்களில் தேவையான அளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மேலும், நான்கு மாவட்டங்களைச் சார்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பு அலுவலர்கள் இக்கூட்டத்தில் அளிக்கப்படும் பயிற்சியின் வாயிலாக தேர்தல் தொடர்பான அனைத்து விவரங்களையும், நடவடிக்கைகளையும் முழுமையாக அறிந்து தேர்தல் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்".
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள் ஜி.எஸ்.சமீரன் (கோவை), எஸ்.வினீத் (திருப்பூர்), எச்.கிருஷ்ணனுண்ணி (ஈரோடு), கீர்த்தி பிரியதர்ஷினி (நீலகிரி / பொறுப்பு), மாநகராட்சி ஆணையர்கள் ராஜகோபால் சுன்கரா (கோவை), கிராந்திகுமார் பாடி (திருப்பூர்), கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் எம் தாமோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் செல்வநாகரத்தினம் (கோவை), ஆஷிஷ் ராவத் (நீலகிரி), முதன்மைத் தேர்தல் அலுவரல்கள் க.அருண்மணி (ஊராட்சிகள்), கு.தனலெட்சுமி(நகராட்சி), தேர்தல் உதவி ஆணையர் சம்பத்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.