புதுக்கோட்டை அருகே இளம்பெண் ஆணவக்கொலை?- சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில் எஸ்பி பதிலளிக்க உத்தரவு

புதுக்கோட்டை அருகே இளம்பெண் ஆணவக்கொலை?- சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில் எஸ்பி பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

புதுக்கோட்டை அருகே மாற்று சாதி இளைஞரைக் காதலித்த மகளை பெற்றோர் ஆணவக்கொலை செய்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கோரிய மனுவுக்கு புதுக்கோட்டை எஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

’’புதுக்கோட்டை பொன்னமராவதி மங்களிப்பட்டியைச் சேர்ந்த அழகப்பன். இவரது மகள் சிவஜோதியும், சிவகுருநாதன் என்பவரும் காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் சிவஜோதியை அவரது தந்தை கண்டித்தார். பின்னர் சிவஜோதியின் குடும்பத்தினர் சிவகுருநாதனின் குடும்பத்தினரை சாதியின் பெயரைச் சொல்லி மிகவும் மோசமாகத் திட்டியுள்ளனர்.

இந்நிலையில் ஜூலை 2-ம் தேதி சிவஜோதி மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அவரது உடலைக் குடும்பத்தினரே எரியூட்டியதாகவும் தகவல் கிடைத்தது. சிவஜோதி இறப்பு குறித்து போலீஸில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. பிரேதப் பரிசோதனையும் நடத்தப்படவில்லை. இததொடர்பாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், செப். 25-ம் தேதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

சிவஜோதி மரணத்தில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. சிவஜோதியை அவரது குடும்பத்தினர் ஆணவக்கொலை செய்துள்ளனர். இது்குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உண்மையைத் தெரிவிக்க அச்சப்படுகின்றனர். எனவே சிவஜோதி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும்‘’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.ரத்தினம் வாதிட்டார். பின்னர், மனு தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர், தமிழக டிஜிபி, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 30-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in