

தென்மாவட்டங்களைச் சேர்ந்த 200 இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூட்டில் உள்ள மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டிலுள்ள 90 அரசு தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்து வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழிற்சாலைகள் எந்தெந்த மாவட்டங்களில் உள்ளன என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம்.
மாணவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வது, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான சூழ்நிலைகள், எதைப் படித்தால் வேலை கிடைக்குமோ அது தொடர்பான புதிய பயிற்சிகள் தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திறன் மேம்பாட்டுத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் எந்த நிறுவனங்களுக்காக பயிற்சி கொடுக்கிறோமோ அந்த நிறுவனங்கள மற்றும் பயிற்சி நிலையங்கள் 100-க்கு 70 சதவீதப் பயிற்சியாளர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும். இந்த உத்தரவாதத்தின் அடிப்படையில்தான் பயிற்சி கொடுத்து வருகிறோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொழில்பயிற்சி பெற்றவர்களுக்கான பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குமரி, நெல்லை, தூத்துக்குடி உட்படத் தென்மாவட்டங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, இங்கு பயிற்சி அளித்து பணி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் மொத்தம் 17 உள்ளது. அமைப்புச்சாரா தொழிலாளர்கள் சுமார் 30 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். அவர்களுக்குக் கடந்த 10 ஆண்டில் விபத்து, மரணம், குடும்ப ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றுக்காக 75 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் இருந்தன. உடனடியாக அதைச் சீர்செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஒரே நாளில் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தீபாவளி முடிந்ததும் நிலுவையிலுள்ள நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ஆறு மாத காலத்திற்குள் மட்டும் 87,502 தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய அரசு தற்போதைய தமிழக அரசு என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.