Published : 28 Oct 2021 04:55 PM
Last Updated : 28 Oct 2021 04:55 PM

ஓபிஎஸ் கருத்து: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

மதுரை

சசிகலா குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்ததற்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, மீண்டும் கட்சியில் இணைவதில் ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே எதிர்பாராதவிதமாக, ''அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும், ஏற்காததும் மக்களின் முடிவு. அதிமுக தொண்டர்களின் இயக்கம். சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பது குறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்'' என்று ஓபிஎஸ் தெரிவித்தது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி தரும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''சசிகலாவையும் அவரைச் சார்ந்தவர்களையும் எதிர்த்துத்தான் தர்ம யுத்தத்தை ஓபிஎஸ் நடத்தினார். சசிகலா, அவரைச் சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அப்படி வைத்துக்கொண்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கெனவே தீர்மானம் போடப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறிய கருத்தால் கட்சிக்குள் எவ்வித சர்ச்சையும் கிடையாது. நீங்கள்தான் சர்ச்சையைக் கிளப்புகிறீர்கள்.

தேவர் குரு பூஜையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து பங்கேற்பர். பழுத்த மரம்தான் கல்லடி படும். நீங்கள் எங்களைத்தான் ஆளும் கட்சியாக நினைக்கிறீர்கள் போல. திமுவை ஆளும் கட்சியாக நினைக்கவில்லை. ஏனெனில் எங்களைப் பற்றியேதான் கேள்விகளைக் கேட்கிறீர்கள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் கூறியதற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எந்த பதிலும் கூறவில்லை. அவர் தன்னுடைய கருத்தை விரைவில் பதிவு செய்வார். கட்சிக்குள் எல்லோரும் கலந்து பேசுவதைத்தான் கட்சியின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் அவர் கூறினார். ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்துள்ளது. விரைவில் நகர்ப்புறத் தேர்தல் வர உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்சியை எப்படி வழிநடத்துவது, என்ன செய்வது என்பதைத் தலைமைக் கழக நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்போம் என்று ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு?'' என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x