

ராம்குமார் உடலைப் பரிசோதனை செய்த மருத்துவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நேரில் ஆஜராகி, தான் அளித்த அறிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.
சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அலுவலகம் செல்வதற்காகக் காத்திருந்த மென்பொறியாளர் சுவாதி 2016-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி காலை 6.30 மணியளவில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அடுத்த சில நாட்களில் திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரத்தில் ராம்குமார் (22) என்ற இளைஞரைக் கைது செய்தனர். புழல் சிறையில் ராம்குமார் அடைக்கப்பட்டார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராம்குமார் அடுத்த சில வாரங்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. இந்த வழக்கு குறித்த விசாரணையை மாநில மனித உரிமை ஆணையமும் நடத்தி வருகிறது.
ராம்குமார் மரணம் தொடர்பாக மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்களின் அறிக்கைகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. ராம்குமாரின் உடல் திசுக்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் அவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என ஹிஸ்டோபாதாலஜி (Histopathology) துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு ஆகஸ்ட் 18-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிக்கையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அப்போது பேராசிரியர்களாக இருந்த மருத்துவர்கள் ஆண்டாள், வேணு ஆனந்த் ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ராம்குமாரின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது மூளை, இதயத் திசுக்கள், நுரையீரல்கள், கல்லீரல், நாக்கு, உதடுகள், மண்ணீரல், சிறுநீரகங்கள் ஆகியவை நல்ல நிலையில் இருந்ததாகச் சான்றளித்துள்ளனர்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவ அதிகாரி டாக்டர் சையது அப்துல் காதர் அளித்துள்ள அறிக்கையில், "2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமாரின் உடல் கொண்டுவரப்பட்டது. அந்த உடலுடன் சிறைத்துறை மருத்துவரும் வந்திருந்தார். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து எந்த நகலையும் சிறை மருத்துவர் அளிக்கவில்லை. ராம்குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை. நான் வழங்கிய பதிவேட்டிலும் மின்சாரம் தாக்கியதால் ராம்குமார் உடலில் காயங்கள் ஏற்பட்டதாக எங்கும் குறிப்பிடவில்லை" என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மருத்துவர் சையது அப்துல்காதர் இன்று (அக். 28) நேரில் ஆஜரானார். ராம்குமார் உடலைப் பரிசோதனை செய்து அவர் அளித்துள்ள அறிக்கை குறித்து மாநில மனித உரிமை ஆணைய நீதிபதியிடம் அவர் விளக்கம் அளித்தார்.