Published : 28 Oct 2021 03:23 PM
Last Updated : 28 Oct 2021 03:23 PM

திருப்பூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கிய விவகாரம்: சத்துணவு அமைப்பாளர் தற்காலிகப் பணியிடை நீக்கம்

அழுகிய முட்டைகள்.

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கிய விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சத்துணவு அமைப்பாளரைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலம் 18-வது வார்டுக்கு உட்பட்ட வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, கடந்த 26-ம் தேதி சத்துணவு அமைப்பாளர் மூலம் முட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

விநியோகம் செய்யப்பட்ட முட்டைகள் அனைத்தும் அழுகிய நிலையில், புழுக்கள் பிடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி ஆணையருக்கும் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை சமூக நல இயக்குநர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரால் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 27-ம் தேதி வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளிக்கு அக்டோபர் மாதத்துக்கு சத்துணவு முட்டைகள் 178 பேருக்கு, தலா ஒருவருக்கு 10 முட்டைகள் வீதம் ஆயிரத்து 780 முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டன.

பிச்சம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி (பொ) சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரி முட்டைகளைப் பெற்றுள்ளார். இதையடுத்து, 26-ம் தேதி 57 மாணவ, மாணவியருக்கு 10 முட்டைகள் வீதம் 570 முட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது.

எஞ்சிய 10 அட்டைகளில் இருந்த 300 முட்டைகள் கெட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிக்கு அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். இந்த நிலையில், சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரி பதிவேடுகளை முறையாகப் பராமரிக்கவில்லை.

முட்டைகளைத் தரம் பிரித்து 3 நாட்களுக்குள் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யாமல், கெட்டுப்போன முட்டைகள் தொடர்பாக மேல் அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்காமல், தன்னிச்சையாகக் குப்பைத் தொட்டியில் போட்டது விசாரணையில் தெரியவந்தது.

கெட்டுப்போன முட்டைகளை விநியோகம் செய்திருந்தால், குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சத்துணவு அமைப்பாளர் மகேஸ்வரியைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் இன்று (அக். 28) உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x