

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்குத் தனியார் வாகனங்களில் செல்வதற்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.
மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த சங்கிலி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா ஆண்டுதோறும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய நாட்களில் அரசு விழாவாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முத்துராமலிங்கத் தேவரின் 104-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழாவும் கொண்டாடப்படுகிறது. குரு பூஜையின்போது பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல், அபிஷேகம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இந்த நிகழ்வுகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்பர்.
இந்நிலையில் சில ஆண்டுகளாகத் தனியார் வாகனங்களில் பசும்பொன் தேவர் நினைவிடம் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தனியார் வாகனங்களில் பசும்பொன்னிற்குச் செல்ல அனுமதி கேட்டு மனு அளித்தும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு, தனியார் வாகனங்களில் செல்வதற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ''தேவர் ஜெயந்தி விழாவில் 2017-ல் இருந்த சூழல் தற்போது இல்லை. இதனால் தேவர் ஜெயந்தி விழாவை அரசு அமைதியாக நடத்த விரும்புகிறது. அதற்காகச் சில நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 2017-ல் பிற மாவட்டங்களில் இருந்து வருவோர்கள் பசும்பொன்னிற்குச் செல்வதற்காக மாவட்ட எல்லையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கவும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், தற்போது கரோனா நோய்ப் பரவலும் உள்ளது. இந்தச் சூழலில் தேவர் ஜெயந்தி விழாவுக்கு அரசால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கினால் அது நோய்ப் பரவல் அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடும். எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு முடித்து வைக்கப்படுகிறது'' என உத்தரவிட்டனர்.