கோவை மாவட்டத்தில் களம் காணத் துடிக்கும் திமுக வாரிசுகள்

கோவை மாவட்டத்தில் களம் காணத் துடிக்கும் திமுக வாரிசுகள்
Updated on
2 min read

கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட வாரிசுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை திமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான பொங்கலூர் பழனிச்சாமி பிரதான இடத்தைப் பிடித்துவந்தார். மதிமுகவிலிருந்து திரும்பி வந்த மு.கண்ணப்பன், வேகமான அரசியல் ஏதும் காட்டாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். கோவை மாவட்டம் 4 கட்சி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு 4 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதனையொட்டி பொங்கலூர் பழனிச்சாமி சேலம் மண்டல கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதனால், அவரது அரசியல் வேகம் கோவையில் முன்புபோல வேகமாக இல்லை என கூறுகின்றனர் கட்சியினர்.

இந்த நிலையில் மு.கண்ணப்பனும், பொங்கலூர் பழனிச்சாமியும் இந்த முறை எந்தத் தொகுதியிலும் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. மாறாக பொங்கலூராரின் மகனும், திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான ப.பைந்தமிழ் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் சீட் கேட்டுள்ளார். இவரது மருமகனும், திமுக மாநில மருத்துவ அணி துணைச் செயலாளருமான ரா.கோகுல் கிருபாசங்கரும் இதே தொகுதிகளில் சீட் கேட்டுள்ளார்.

மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாரிசுகளின் அரங்கேற்றமே கோலாகலப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் 23, சூலூரில் 30, கவுண்டம்பாளையத்தில் 32, கோவை வடக்கில் 14, தொண்டாமுத்தூரில் 20, கோவை தெற்கில் 20, சிங்காநல்லூரில் 17, கிணத்துக்கடவில் 22, பொள்ளாச்சியில் 12, வால்பாறையில் 34 என ஆகமொத்தம் 224 பேர் திமுக தலைமையிடம் சீட் கேட்டு விண்ணப்பித்து நேர்காணலுக்கும் சென்று வந்துள்ளனர். இவர்களில் 2 மற்றும் 3 இடங்களில் விண்ணப்பித்தவர்கள் ஒரு சிலரே. அதில், சி.ஆர்.ராமச்சந்திரன் (மேட்டுப்பாளையம்), பா.அருண்குமார் (கவுண்டம்பாளையம்) என 2 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மட்டுமே சீட் கேட்டுள்ளனர். முன்னாள் எம்.எல்.சி கே.எம்.தண்டபாணி (கோவை வடக்கு) சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளார். மற்றபடி முன்னாள்களின் வாரிசுகளே அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முனைப்பு காட்டுகின்றனர்.

மறைந்த முன்னாள் அவிநாசி எம்.எல்.ஏ. இளங்கோவின் மகன்கள் இ.ஆனந்தன், இ.மதனகோபால் ஆகியோர் வால்பாறை தொகுதியை கேட்டுள்ளனர். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. சி.டி.தண்டபாணியின் மகன் சி.டி.டி.பாபுவும் இதே தொகுதிக்கு விண்ணப்பித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏவும் நெகமம் நெப்போலியன் என பெயர் பெற்றவருமான கே.வி.கேயின் பேரன் கே.வி.கே.எஸ். சபரிகார்த்திகேயன் பொள்ளாச்சி தொகுதியில் சீட் கேட்டுள்ளார். இதே தொகுதியில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ ராஜூவின் மகன் தமிழ்மணியும் விண்ணப்பித்துள்ளார். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடியின் மகன் பொன்முடி விக்னேஷ்வரன் சூலூர் தொகுதியை கேட்டிருக்கிறார். திமுகவின் முன்னோடியும், உயர்நிலைக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பியுமான மு.ராமநாதன் மகன் மு.இரா.செல்வராஜ் கோவை தெற்கு தொகுதியை எதிர்பார்த்துள்ளார். முன்னாள் அமைச்சரும், மூத்த முன்னோடியுமான மு.கண்ணப்பனின் மகன் மு.க.முத்து பொள்ளாச்சி தொகுதியில் சீட் கேட்டிருக்கிறார்.

ஆக மொத்தம் 10 தொகுதிகளிலும் கட்சி பிரமுகர்களின் வாரிசுகளே சீட் கேட்டு நிற்பதை பார்த்து கோவை திமுக அடிப்படை உறுப்பினர்களே வியந்துபோயுள்ளனர். இவர்களில் சீட் கிடைத்து களம் காணப் போவது யார்? வெற்றிக் கனியை பறிக்கப் போவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in