வெள்ளத்தில் சிக்கிய தாய் - சேயை மீட்டவர்: தொலைபேசியில் கமல் பாராட்டு

வெள்ளத்தில் சிக்கிய தாய் - சேயை மீட்டவர்: தொலைபேசியில் கமல் பாராட்டு
Updated on
2 min read

துணிச்சலை மட்டும் கைவிட்டு விடாதீர்கள் என்று வெள்ளத்தில் சிக்கிய தாய் - சேயை மீட்டவருக்குத் தொலைபேசி வாயிலாக கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் குற்றாலம் எனப்படும் அருவி, கல்வராயன் மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தச் சுற்றுலாத் தலத்துக்கு சேலம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்வது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் தினந்தோறும் ஆங்காங்கே மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்தது. இதனை ஆனைவாரி அருவியில் வழக்கத்தை விட அதிகமாக நீர் கொட்டியது.

அக்டோபர் 24-ம் தேதி மாலையில் பலர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், செந்நிறத்தில் நீர் கொட்ட ஆரம்பித்தது. இதனைக் கவனித்த வனத்துறையினர், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தினர்.

திடீரென வெள்ளம் பெருக்கெடுத்ததால், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் உள்பட 5 பேர் அருவியின் மறு கரையில் ஒதுங்கினர். வெள்ளம் அதிகரித்ததால், அவர்களில் இருவர் அங்கிருந்த பாறை மீது ஏறிக் குழந்தை, பெண் ஆகியோரை மீட்டனர். மற்ற இருவர் பாறை மீது ஏற முயன்றபோது, தவறி வெள்ளித்தில் விழுந்தனர். சிறிது தூரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் சற்று தூரத்தில் கரை ஒதுங்கித் தப்பித்தனர்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலானது. தாயையும், குழந்தையையும் காப்பாற்றியவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், இவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தாயையும், குழந்தையையும் காப்பாற்றியவர்களில் ஒருவரான அப்துல் ரஹ்மானுக்கு தொலைபேசி வாயிலாகத் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன். கமல் - அப்துல் ரஹ்மான் இருவரும் தொலைபேசியில் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் அப்துல் ரஹ்மானிடம் கமல் பேசியதாவது:

"நீங்கள் வனத்துறை அதிகாரியாக இல்லாமல் போனாலும் உதவியதில் மகிழ்ச்சி. ஏனென்றால், அனைவருக்கும் இந்தக் கடமை இருக்கிறது. அதில் நீங்கள் புரிந்துகொண்டு துணிச்சலாகச் செய்திருக்கிறீர்கள். இந்த இருவரும் இறந்திருக்கலாம், நீங்களும் அந்த வழியில் சென்றிருக்கலாம். ஆனால், துணிந்து செய்திருப்பதுதான் நம் அரசியலுக்கும் வேண்டும், நாட்டுக்கும் வேண்டும், வீட்டுக்கும் வேண்டும்.

நீங்கள் கட்சியில் சேருங்கள் என்று சொல்லவில்லை. துணிச்சலை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். அந்தக் கூட்டத்தில் நிறைய பேர் செல்லாதே என்று நிறைய பேர் கூறியுள்ளார்கள். எனக்கு அந்த வீடியோவைப் பார்க்கும்போது கோபமாகவே இருந்தது. நீங்கள் காப்பாற்றும்போது நிறைய பேர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தது பொறுக்கித்தனம்.

பிரசவம் பார்த்த மருத்துவரை விட, நீங்கள் காப்பாற்றிய குழந்தை மீது உங்களுக்கு உரிமை அதிகம். அது இயற்கை ஏற்படுத்திய உணர்வு. உங்களுக்காக ஒரு குடும்பம் காத்துக் கொண்டிருந்தது. அதெல்லாம் விட்டுப் போனீர்கள். உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதற்கு இயற்கைக்கு நன்றி".

இவ்வாறு கமல் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in