சங்கராபுரம் பட்டாசுக் கடை வெடி விபத்தில் உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு

சங்கராபுரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடம்.
சங்கராபுரம் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடம்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடந்த பட்டாசுக்கடை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துஉள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் மளிகைக் கடையில் மேல் தளத்தில் பட்டாசு விற்பனை நடத்தி வந்தார். இந்தக் கடையில் நேற்று முன்தினம் இரவு பட்டாசு வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட தீ, அருகிலுள்ள பேக்கரி கடைக்கும் பரவியதைத் தொடர்ந்து, பேக்கரி கடையில் இருந்த 8 எரிவாயு சிலிண்டர்களும் வெடித்து சிதறின. இதில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது மட்டுமின்றி, பக்கத்து கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.

இதில் கட்டிடத்துக்கு எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்த தியாகதுருகத்தைச் சேர்ந்த ஷா ஆலம் (24), சங்கராபுரத்தைச் சேர்ந்த சையத் காலித்(22), ஷேக்பஷீர் (60), நாசர்(60) மற்றும் அய்யாசாமி (65) ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் நேற்று காலை கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த நிலையில் கிடந்த வள்ளி(62) மற்றும் சிறுவன் தனபால்(11) ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. இதில் விபத்தில் காயமடைந்த 11 பேருக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சங்கராபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து நிகழ்ந்த இடத்தை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் ஆகியோர் பார்வையிட்டனர்.

பட்டாசுக் கடை நடத்த ஆண்டுமுழுவதும் உரிமம் பெற்றுள்ளசெல்வகணபதி, ‘கிணறு தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் வெடி மருந்து பொருட்களையும் அங்கு வைத்திருந்தாகக் கூறப்படுகிறது. மளிகைக் கடையின் மேல் தளத்தில் பட்டாசுகளை வைத்திருந்ததோடு, பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லை. நெருக்கடி மிகுந்தஇடத்தில் கடை நடத்தி வந்த நிலையில், பட்டாசுக் கடைக்கு அருகே பேக்கரி கடை அமைந்திருந்ததால், அதிலிருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதும்தான் விபத்துக்கு முக்கிய காரணம் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்து நிலையம் அருகிலேயே மிகப்பெரிய தீ விபத்து நடைபெற்ற தகவல், சங்கராபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வாகனத்தில் தயார் நிலையில் தண்ணீர்இல்லாததும், கூடுதல் வாகனங்கள் இல்லாதததும், விபத்து அதிகரிப்பதற்கான காரணங்களாகக் கூறப்படுகிறது. 15 நிமிடங்களுக்குப் பின்னரே சங்கராபுரம், கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வாகனங்கள் வந்து தீயை அணைத்தன.

தலைவர்கள் இரங்கல்

விபத்து நிகழ்ந்த பகுதியை நேற்று பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ், மத்திய அைச்சர் எல்.முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in