

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சரக்கு வாகனங்கள் பகலில் வர அனுமதி இல்லை என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை சார்பில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு போக்குவரத்து காவல் எல்லைக்கு உட்பட்ட புறநகர் பேருந்து நிலையத்துக்கு நவ.1 முதல் 3-ம் தேதி வரை 3 நாட்களுக்கு 3 ஆயிரம் அரசுப் பேருந்துகள், 800 தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் காரணமாக அதிக அளவில் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிகாலை 5 மணி வரை
எனவே, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்களை பகல் நேரத்தில் அனுமதிக்க இயலாது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும்படி, தங்களின் முகவர்களுக்கு வியாபாரிகள் தெரிவிக்க வேண்டும். சரக்குகளை இறக்கிய பின்பு, போக்குவரத்து இடையூறு இல்லாமல் சரக்கு வாகனங்களை தகுந்த நிறுத்தத்தில் நிறுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.