

தேவர் ஜெயந்தி விழாவுக்கு இந்த ஆண்டு அதிமுக இணை ஒருங் கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலை வருமான கே.பழனிசாமி பசும்பொன் வருவாரா? என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இவ்விழாவில் பங்கேற்க சசிகலா இன்றே மதுரை வருவதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை இன்று (28-ம் தேதி) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்.30-ம் தேதி அதிமுக, திமுக மட்டுமின்றிதமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் திரண்டு வந்து மரியாதை செலுத்துவார்கள்.
இந்த ஆண்டும் கடந்த காலங் களை போல் தேவர் ஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தென் மாவட்ட அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இதுவரை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை. அதனால், அவர் இந்த விழாவில் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்ற குழப்பம் அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அவர் நாளை (29-ம் தேதி) இரவு மதுரை ரிங் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்க, அதிமுகவினர் அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். அவரை அழைத்துவர முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர முயற்சி செய்து வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ.முனியசாமியிடம் கேட்டபோது, ‘இன்று (28-ம் தேதி) காலை 10.30 மணி அளவில் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி வருகை தருவது குறித்து முடிவு தெரி யும்,’ என்றார்.
அதேநேரத்தில் அதிமுக ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்பது உறுதி செய்யப் பட் டுள்ளது. அதிமுகவில் யார், யார் பங்கேற்கிறார்கள் என்பது உறுதி செய்யப்படாதநிலையில், தேவர் ஜெயந்தி விழாவை இந்த ஆண்டு தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சசிகலா தரப்பினர் காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதற்காகவே இந்த விழாவில் பங்கேற்க சசிகலா இன்று மதியம் மதுரை வருவதாகவும், அவரை வரவேற்க ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
29-ம் தேதி ஒருநாள் முன் கூட்டியே சசிகலா பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவர் நினை விடத்தில் மரியாதை செலுத்திவிட்டு தஞ்சாவூர் புறப்பட்டுச் செல்கிறார். சசிகலாவின் வருகை தென் மாவட்ட அதிமுகவினரிடம் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.