ஆர்டிஓ அலுவலகங்களில் இடைத்தரகர்களை தடுக்க நடவடிக்கை: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்

திருநெல்வேலி  ஆட்சியர்  அலுவலகத்தில்  நடைபெற்ற  வடகிழக்கு  பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும்  பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்  குறித்த ஆய்வுக் கூட்டத்தில்  சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, போக்குவரத்து துறை அமைச்சர்  ராஜ கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்று  நல உதவிகள் வழங்கினர்.படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆகியோர் பங்கேற்று நல உதவிகள் வழங்கினர்.படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற் பாடுகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமை வகித்தார். ஆட்சியர் விஷ்ணு வரவேற்று பேசினார். ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப் பன் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து ஊருக்கு செல்பவர்கள் வசதிக்காக 14,700-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தேவை ஏற்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் தயாராக உள்ளோம். தனியார் ஆம்னி பேருந்துகளில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட ஏதாவது குற்றச்சாட்டு இருந்தால், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே 35 ஆயிரம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து முன்பதிவு நடைபெற்று வருகிறது.

டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் பெண்கள் எண்ணிக்கை தற்போது தினமும் 38 லட்சமாக அதிகரித்துள்ளது. போக்குவரத்துத் துறைக்கு 1,450 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்களை தவிர்க்க கணினிமயமாக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியில் பேருந்தை கழுவ 62 ரூபாயாக இருந்தது. தற்போது 30 ரூபாய்க்கு குறைத்துள்ளோம். டயர்களை 42 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட நிலை மாறி, தற்போது 54 ஆயிரம் கிலோ மீட்டர் ஓட்டும் வகையில் செய்துள்ளோம். 2,210 டீசல் பேருந்துகள், 500 எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகராட்சி களில் எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும்.

போக்குவரத்து கழகங்களில் 6,000 பேர் நியமிக்கப்பட உள்ள னர். தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன் உள்ளிட்டவை குறித்து கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுடன் பேச்சுவார் த்தை நடத்தி, அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தப்படும். ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை கமிட்டி நடத்தும் என்றார்.

வங்கிகளின் சங்கமம்

பாளையங்கோட்டை வ.உ.சி. உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் வங்கியாளர்கள் குழுமம் சார்பில் ‘வங்கிகளின் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர் ராஜ கண்ணப் பன் கலந்துகொண்டு, கடனுதவிகளை வழங்கினர். 16 வங்கிகள் இணைந்து இந்நிகழ்ச் சியை நடத்தின. இதில், 250 வாடிக்கையாளர்களுக்கு ரூ.61.21 லட்சம் மதிப்பில் வீட்டுக்கடன், தனிநபர் கடன், 198 பேருக்கு ரூ. 17.8 லட்சம் மதிப்பில் தொழிற்கடன், 572 விவசாயி களுக்கு ரூ.21.28 லட்சம் மதிப்பில் கடனுதவி, 397 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.22.49 லட்சம் மதிப்பில் கடனுதவி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 2 பேருக்கு தலா ரூ.1.94 லட்சம் கடனுதவி என, மொத்தம் 1,419 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டது.

மழை பாதிப்பை தடுக்க ஏற்பாடு

முன்னதாக ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசும்போது, “வடகிழக்கு பருவமழை காலத்தில் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அணைகளில் நீர்வரத்து இருப்பு மற்றும் நீர்போக்கு விவரங்கள், குளங்கள் மற்றும் கால்வாய்களை கண்காணித்து உடனுக்குடன் அறிக்கை அளிக்க வேண்டும். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய தேவையான சாக்கு, மணல், சவுக்கு கட்டைகள் போன்ற பொருட்களை முன்கூட்டியே சேகரித்து வைக்க வேண்டும். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக மாவட்டத்தில் இடங்களை தேர்வு செய்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார். மாற்றுத் திறனாளிகள் 4 பேருக்கு இயந்திரத்துடன் கூடிய சக்கர நாற்காலி, கரோனா நோயால் பெற்றோரில் ஒருவரை இழந்த 16 குழந்தைகளுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. எம்.பி . தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் கொக்கிரகுளம் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in