Last Updated : 27 Oct, 2021 07:19 PM

 

Published : 27 Oct 2021 07:19 PM
Last Updated : 27 Oct 2021 07:19 PM

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான வழக்கு விசாரணை திருப்தியாக இல்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணை திருப்தியாக நடைபெறவில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கும்பகோணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கணேசன், சுவாமிநாதன். இவர்கள் பாஜக நிர்வாகிகளாக இருந்தனர். சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்ததால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்பட்டனர். கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கணேசன், அவர் மனைவி அகிலாண்டம், சுவாமிநாதன், சோலை செல்வம் உள்படப் பலரைக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இவர்களில் சோலை செல்வம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''மனுதாரர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி வழக்கைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, ''இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருக்கும்போது, முக்கியக் குற்றவாளியின் மனைவி அகிலாண்டம் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். கீழமை நீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்காதது ஏன்? ஜாமீன் பெற்றவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரை ஜாமீனில் விட்டால் சொத்துகளை எப்படிப் பறிமுதல் செய்ய முடியும்?

பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு பணத்தைத் திரும்ப வழங்குவது? இவற்றைக் கருத்தில் கொள்ளாததது ஏன்? மேலும் முக்கியக் குற்றவாளியின் மனைவி ஒரு வழக்கில்தான் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால், அவர் மீது பல வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் அவரைக் கைது செய்யாதது ஏன்? விசாரணை முறையாக நடைபெற்றால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு விசாரணை அதிகாரிகள் செயல்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

பின்னர், சோலை செல்வத்துக்கு ஜாமீன் வழங்கி, அவர் வாரம் ஒரு நாள் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x