

புதுச்சேரியில் கூலிக்குக் கொலை செய்யும் கலாச்சாரம் அதிகமாக இருக்கிறது என பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் தனது வீட்டின் அருகே, கடந்த 22-ம் தேதி இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட, பாமக மாவட்டச் செயலாளராக இருந்த க.தேவமணி வீட்டுக்கு இன்று (அக்.27) அன்புமணி ராமதாஸ் நேரில் சென்றார். தேவமணியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கட்சியில் அடிமட்டத் தொண்டராக இருந்து இந்தப் பொறுப்புக்கு வந்தவர் தேவமணி. பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளார். இப்பகுதியில் மதுக்கடைகளை மூட கடுமையாகப் போராடி, மதுக்கடைகள் சார்ந்த 108 பார்களை மூடியுள்ளார்.
எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் மிகப்பெரிய சூழ்ச்சிகள் உள்ளன. பெயரளவுக்கு 4 பேரைக் கைது செய்துள்ளனர். முக்கியக் குற்றவாளிகள் இன்னும் வெளியில்தான் உள்ளனர். கொலைக்குப் பின்னணியில் காவல்துறையும் உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அதனால் காவல்துறையைச் சார்ந்தவர்கள் ஒழுங்கான முறையில் முழுமையான விசாரணை நடத்தி, கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மனசாட்சி இல்லாத, மிருகங்களை விட மோசமான நபர்கள் இப்படியான செயலைச் செய்துள்ளனர்.
என்னைப் பொறுத்தவரை அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். கூலிக்குக் கொலை செய்யும் கலாச்சாரத்தை வேரோடு அழிக்க வேண்டும். இந்தக் கலாச்சாரம் புதுச்சேரியில் அதிகமாக இருக்கிறது. வெளியில் குற்றம் செய்து புதுவையில் தஞ்சமடைகிறார்கள். புதுவையில் குற்றம் செய்துவிட்டு வெளியில் தஞ்சமடைகிறார்கள். இந்தக் கலாச்சாரத்தை ஒழிக்க ஆட்சியாளர்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தேவமணி கொலை வழக்கைக் காவல்துறை முறையாக விசாரிக்க வேண்டும். அவ்வாறு நடத்தவில்லை என்றால் பாமக கடுமையான தொடர் போராட்டங்களை நடத்தும். முழுமையான விசாரணை நடக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கோ.தன்ராஜ் தலைமையிலான பாமக குழு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதல்வர் ஆகியோரை நேரில் சந்தித்து முழுமையான விசாரணை நடத்த வலியுறுத்துவார்கள்”.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.