தமிழகம் முழுவதும் ஐடிஐகளில் வேலைவாய்ப்புகள் தரும் புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்படும்: அமைச்சர் சி.வி.கணேசன்

நாகலாபுரத்தில் உள்ள உமறுப்புலவர் அரசு ஐடிஐ வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியை அமைச்சர் சி.வி.கணேசன் பார்வையிட்டு ஒப்பந்ததாரரிடம் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
நாகலாபுரத்தில் உள்ள உமறுப்புலவர் அரசு ஐடிஐ வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியை அமைச்சர் சி.வி.கணேசன் பார்வையிட்டு ஒப்பந்ததாரரிடம் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி கல்வி நிலையங்களில் வேலைவாய்ப்பைத் தரும் புதிய பாடப்பிரிவுகள் கொண்டுவரப்படும் என தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் உள்ள உமறுப்புலவர் தொழிற்பயிற்சி கல்வி நிலையத்தைத் தமிழக தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று ஆய்வு செய்தார். மேலும், தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் மாணவர்களுக்கான விடுதியையும் பார்வையிட்டார். பின்னர் பயிற்சி நிலைய முதல்வர் கே.ராஜனிடம் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

அவருடன் சமூக நலம்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், தமிழக திறன் மேம்பாட்டுத்துறை இயக்குநர் வீரராகவராவ், கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் ரகுபதி, மாநில திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன் பெரியசாமி, ராதாகிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் மும்மூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து, அவர் வேப்பலோடையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி கல்வி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற உறுதியைக் கொடுத்துள்ளார். இதற்காகத் தமிழகத்தில் உள்ள 90 தொழிற்பயிற்சி நிலையங்களையும் ஆய்வு செய்து, தற்காலச் சூழ்நிலைக்கு ஏற்பப் புதிய பாடப்பிரிவுகளைக் கொண்டுவந்து, மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மாணவர்கள் படித்த தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது 25 ஆயிரம் பேர் படிக்கின்றனர். அனைத்துத் தொழிற்பயிற்சி நிலையங்களின் புள்ளி விவரங்களை எடுத்து, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று, வரும் கல்வியாண்டில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய அளவில் உருவாக்குவதுதான் தமிழக அரசின் நோக்கமாக உள்ளது.

தமிழகத்தில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும், குறிப்பாக ஐடிஐ படித்தவர்களுக்குக் கட்டாயமாக வேலைவாய்ப்பை முதல்வர் உருவாக்கித் தருவார் என்ற உறுதியை நான் தருகிறேன். அதற்கு உதாரணம் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் வீடுகள்தோறும் குடிநீர் வழங்க வேண்டியது உள்ளது. அந்தப் பணிகளுக்கு ஆயிரக்கணக்கான பிளம்பர்கள் தேவை. அதேபோல், அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு தேவைப்படுகிறது. அதனால், எலக்ட்ரீஷியன் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்தப்படும்.

வயர்மேன், ஏ.சி. மெக்கானிக், கணினி ஆப்பரேட்டர் என இளைஞர்களுக்கு எந்தெந்தப் பிரிவுகளில் வேலை கிடைக்குமோ அந்தப் புதிய பாடப்பிரிவுகளைக் கொண்டு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கப் போகிறோம். சிறு, குறு தொழில்முனைவோர்களுக்குக் கடன் வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்''.

இவ்வாறு அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in