

பள்ளி மாணவர்களுக்கான இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மரக்காணம் அருகே இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.
இல்லம் தேடிக் கல்வி என்ற புதிய திட்டத்தின் கீழ், மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைத் தீர்க்கவும், 1 முதல் 8-ம் வகுப்புகள் வரையான மாணவர்களுக்குக் கற்றல் இடைவெளி மற்றும் இழப்பைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் மாலை, 1 முதல் 2 மணி நேரம் வரை 1.70 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
இத்திட்டத்தை இன்று மாலை 4.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்காணம் அருகே முதலியார் குப்பத்தில் தொடங்கி வைக்கிறார். இதற்காக கார் மூலம் மதியம் 12.30 மணிக்குச் சென்னையில் இருந்து வந்த முதல்வர் ஸ்டாலின், கூனிமேட்டில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். மதிய உணவுக்குப் பின் மாலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். இந்நிகழ்ச்சி அரசின் நிலையான கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி சமூக இடைவெளியுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.