Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM

பெட்ரோல் குண்டுவீசி தாய், தந்தை, தம்பியை கொன்ற வழக்கில் திண்டிவனம் தம்பதிக்கு தூக்கு தண்டனை: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

சொத்துக்காக பெற்றோரையும் உடன்பிறந்த சகோதரரையும் பெட்ரோல் குண்டுவீசி கொலை செய்த வழக்கில், மூத்த மகன் மற்றும் அவரது மனைவிக்கு தூக்கு தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிபாக்கத்தை சேர்ந்தவர் ராஜ் (60). இவரது மனைவி கலா (55). இவர்களது மகன்கள் கோவர்த்தனன் (35), கவுதமன் (26). திண்டிவனம் அதிமுக மாணவர் அணி நிர்வாகியாக கோவர்த்தனன் இருந்தார். டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கோவர்த்தனன் மனைவி தீபா காயத்ரி (29). இவர்கள் 5 பேரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டு மே 15-ம் தேதி வீட்டிலுள்ள ஏசி அறையில் ராஜ்,கலா, கவுதமன் மூவரும் தூங்கினர்.மற்றொரு அறையில் கோவர்த்தனனும், தீபா காயத்ரியும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்த அறையில் ஏசி வெடித்து தீப்பற்றி எரிவதாக கோவர்த்தனன் அலறினார். வீட்டின் வெளியே வந்து அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.

காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அதற்குள் ராஜ், கலா, கவுதமன் மூவரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே, தீ விபத்து ஏற்பட்டஅறையை ஆய்வு செய்த தீயணைப்புத் துறையினரும், காவல் துறையினரும் விபத்து குறித்து சந்தேகம் தெரிவித்தனர். ராஜ் தலையில் அடிபட்டு, அந்த அறையில் ரத்தம் சிதறியுள்ளது. இதேபோல கவுதமன் தலையிலும் காயம் இருந்துள்ளது. கலா எரிந்த நிலையில் கிடந்துள்ளார். தீப்பிடித்து எரிந்த அறையில் பெட்ரோல் வாசனை இருந்தது கண்டறியப்பட்டது. அறை முழுவதும் தீப்பற்றிய பிறகே ஏசிக்கு தீ பரவியது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரும்திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.

திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளர் சீனிபாபு, உதவி ஆய்வாளர் ரவிசந்திரன் ஆகியோர் தீவிர விசாரணையில் இறங்கினர். தீபா காயத்ரியிடமும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. இறுதியாக கோவர்த்தனனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸாரின் கடுமையான விசாரணை நடைமுறைகளை எதிர்கொள்ள முடியாமல், தனது குடும்பத்தை உயிரோடு எரித்துக்கொலை செய்ததை கோவர்த்தனன் ஒப்புக்கொண்டார்.

விசாரணையில் அவர் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

என் அப்பா ராஜ், வெல்டிங் ஒர்க்‌ஷாப் வைத்திருந்தார். தம்பி கவுதமன் பைனான்ஸ் தொழில் செய்தார். என் தம்பிக்குத்தான் அவர்கள் அதிகமாக பணம் கொடுத்து உதவி செய்தார்கள். என்னை கண்டுகொள்ளவில்லை. தனியாக கல்லூரி தொடங்கப் பணம் கேட்டேன். இல்லை என்று மறுத்துவிட்டார்கள். இருந்த இடத்தையும் விற்று பணத்தை தம்பிக்கு கொடுக்க முடிவு செய்தார்கள். இதனால் எனக்கும் அப்பாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

வேறு வழி தெரியாமல் அப்பா, அம்மா, தம்பி, மூவரையும் கொலை செய்ய திட்டமிட்டு பலநாள் யோசித்து வந்தேன். சம்பவத்தன்று இரவு 2 மணி அளவில், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் வீசி தீ வைத்தேன். அப்பா எழுந்து தப்பிக்கமுயன்றதால் அவரை பாட்டிலால் தலையில் அடித்து மீண்டும் அறைக்குள் தள்ளி கதவை பூட்டினேன். அறை முழுவதும் தீப்பற்றி எரிந்ததும் ஏசி வெடித்து தீப்பிடித்ததாக அக்கம்பக்கத்தினரை நம்ப வைதோம்.

இவ்வாறு போலீஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து திண்டிவனம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். கொலைக்கு பெட்ரோல் குண்டு பயன்படுத்தப்பட்டதால் இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் நேற்று தீர்ப்பு வழங்கினார். கோவர்த்தனன், தீபா காயத்ரி இருவரும் குற்றவாளிகள் என அறிவித்தார். இதையடுத்து இருவருக்கும் தலா 4 தூக்கு தண்டனையும், வெடிமருந்து பொருட்கள் சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். அத்துடன் ரூ.6 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். அரசுதரப்பில் 19 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 35 ஆவணங்கள் மற்றும் 17 சான்று பொருட்கள் குறியீடு செய்யப்பட்டன. ஒரு வயது கைக்குழந்தையுடன் நீதிமன்றத்தில் ஆஜரான கோவர்த்தனனும், தீபா காயத்ரியும் தீர்ப்பை கேட்டவுடன் கதறி அழுதனர்.

இந்த வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர். ஆனாலும், சூழ்நிலை சாட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கை, ரசாயன பகுப்பாய்வு அறிக்கை ஆகியவற்றை வைத்து இருவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்துள்ளதாக அரசு வழக்கறிஞர் விஜயராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x