

சென்னை: மத்திய அரசுத் துறைகளில் போட்டித் தேர்வு மூலம் 731 சுருக்கெழுத்தர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் உள்ள வருவாய்த் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை ஆகியவற்றில் குரூப்-சி, குரூப்-டி பிரிவுகளில் 731 சுருக்கெழுத்தர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான போட்டித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, சுருக்கெழுத்துப் பயிற்சியும் அவசியம். குரூப்-டி பிரிவுக்கு வயது வரம்பு 27, குரூப்-சி பிரிவுக்கு 30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். உரிய வயது, கல்வித் தகுதி உடையவர்கள் https://ssc.gov.in என்ற இணையதளம் வாயிலாக மே 15-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முதல்கட்டமாக, கணினி வழி எழுத்துத் தேர்வு ஜூலை - ஆகஸ்டில் நடைபெறும். பொது நுண்ணறிவுத் திறன், ரீசனிங், பொது அறிவு, ஆங்கில மொழி ஆகிய 3 பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு சுருக்கெழுத்து தேர்வு நடத்தப்படும் என்று எஸ்எஸ்சி அறிவித்துள்ளது.