160 வகையான பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாக்கும் பணி: திருவள்ளூர் மாவட்ட இளைஞர்கள் தீவிரம்

பொன்னேரி அருகே கந்தன்பாளையத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்ட வயல்களில், ஒவ்வொரு ரகத்துக்கும் உள்ள குணாதிசயங்கள் அந்தந்த நெற்பயிரில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் தொண்டை மண்டல அறக்கட்டளையினர் மற்றும் தன்னார்வலர்கள்.
பொன்னேரி அருகே கந்தன்பாளையத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்ட வயல்களில், ஒவ்வொரு ரகத்துக்கும் உள்ள குணாதிசயங்கள் அந்தந்த நெற்பயிரில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் தொண்டை மண்டல அறக்கட்டளையினர் மற்றும் தன்னார்வலர்கள்.
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், 160 வகையான பாரம்பரிய நெல் விதைகளை கலப்படம் இல்லாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பாண்டேஸ்வரம், வேப்பம்பட்டு, கொமக்கம்பேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து, ‘தொண்டை மண்டலம் அறக்கட்டளை’ என்ற பெயரில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்தல், மரம் நடுதல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள், கடந்த 3 ஆண்டுகளாக 160 வகையான பாரம்பரிய நெல் விதைகளை கலப்படமில்லாமல் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, தொண்டை மண்டலம் அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான பார்த்தசாரதி, தன்னார்வலர் ஹரிஹரகுமார் ஆகியோர் தெரிவித்ததாவது:

சீரக சம்பா, கைவரி சம்பா, குள்ளகார், பூங்கார், கருங்குறுவை, தூயமல்லி உள்ளிட்ட நம் பாரம்பரிய நெல் ரகங்கள் மருத்துவ குணம் மற்றும் அதிக சத்துகளை உள்ளடக்கியதாக உள்ளன. ஆனால், அந்த ரகங்களின் விதைகள் கலப்படமில்லாமல் இருந்தால்தான் அதன் மருத்துவ குணங்கள், சத்துகள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

ஆகவே, 2 ஏக்கரில் 1,400 பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு, விதைகளை பாதுகாத்து வரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த விஞ்ஞானி தேபால் தேப்பிடம் பாரம்பரிய நெல் ரக விதைகளை கலப்படமில்லாமல் பாதுகாப்பது தொடர்பாக பயிற்சி பெற்றோம்.

அந்தப் பயிற்சியின் அடிப்படையில், கடந்த 2019-ம் ஆண்டு முதல் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பாண்டேஸ்வரம், கொமக்கம்பேடு, பொன்னேரி அருகே கந்தன்பாளையம், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி, விழுப்புரம் மாவட்டம், சின்னபாபுசத்திரம் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், 160 பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு, கலப்படமில்லாத விதையை உற்பத்தி செய்கிறோம்.

எங்களின் இந்த முயற்சிக்கு, விவசாயிகளான திருப்புட்குழி கணபதி தமிழ்ச் செல்வன், சின்னபாபு சத்திரம் மகேஷ், சுஜாதா ஆகியோர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

பாரம்பரிய நெற்பயிர் நடவு செய்துள்ள வயலை ஒட்டியுள்ள வயல்களில் ஒட்டுரக நெற்பயிர் நடவு செய்திருந்தால், காற்று வீசும்போது ஒரே பயிரில் நடக்க வேண்டிய மகரந்த சேர்க்கை மாறி, இரு வெவ்வேறு நெற்பயிரில் நடக்க வாய்ப்புள்ளது. இதனால், கலப்பு விதை உருவாவதைத் தடுக்க தடுப்பு வலை அமைத்து வருகிறோம்.

அறுவடை காலம் வரை வாரந்தோறும், ஒவ்வொரு ரகத்துக்கும் உள்ள குணாதிசயங்கள் அந்தந்த நெற்பயிரில் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து, உரிய குணாதிசயங்கள் இல்லாத நெற்பயிரை அகற்றி விடுகிறோம்.

இப்படி விதையிடல், நாற்று நடவு செய்தல், பூப்பூக்கும் தருணம், அறுவடைக்குப் பிறகு என 4 தருணங்களில் கலப்பு ஏற்படாத வண்ணம் கண்காணித்து, விதையை உற்பத்தி செய்து, நாளைய தலைமுறைக்காக பாதுகாத்து வருகிறோம்.

பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு 50 கிராம் அல்லது 100 கிராம் விதைகளை இலவசமாக வழங்கி வருகிறோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in