சென்னை சேத்துப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கொலை

சென்னை சேத்துப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கொலை
Updated on
1 min read

சென்னை சேத்துப்பட்டு அரங்க நாதன் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (50). கார் டிரைவரான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107-வது வட்ட துணைச் செயலாளராக பதவி வகித்தார். டாக்டர் அம்பேத்கர் சமூக நலச் சங்கம் என்ற அமைப்பையும் நடத்தி வந்த இவர், சேத்துப்பட்டு மேயர் சிட்டிபாபு தெருவில் வேலைக்கு ஆட்களை வைத்து, டீக்கடையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில், டீக்கடையின் அருகே இளங்கோவன் நேற்று முன்தினம் இரவு, நண்பர் மங்களபுரம் ஜெயவேலுடன் (48) பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர், இளங்கோவனை கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.

தகவலறிந்து வந்த சேத்துப்பட்டு போலீஸார் இளங்கோவனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த திமுக இளைஞரணி உறுப்பினர் சஞ்சய் பிரபு சேத்துப்பட்டு பகுதியில் குடியிருந்தபோது, அவருக்கும், இளங்கோவனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இளங்கோவன் நடத்தி வந்த டீக்கடைக்கு கடந்த 20-ம் தேதி நண்பர்களுடன் வந்த சஞ்சய் பிரபு, கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி யுள்ளார்.

இது தொடர்பாக சஞ்சய் பிரபு மீது இளங்கோவன் சேத்துப்பட்டு போலீஸில் புகார் அளித்திருந்தார். இந்த சூழலில்தான் இளங்கோவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனவே, இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் சஞ்சய் பிரபுவின் சகோதரர் மற்றும் அவரது நண்பர் என இருவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in