

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதியத்தை கட்சி சார்புடைய பணி தள பொறுப்பாளர்கள் வழங்கக்கூடாது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி மூலமாகவே வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தேர்தல் விழிப்புணர்வு பணிகள், புகார்கள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி செய்யப்பட்டு வரும் விழிப்புணர்வு பணிகளை பார்வையிட, 2 மாவட்டங்களுக்கு ஒருவர் என 16 பார்வையாளர்கள் வரும் 9-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.
தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான ‘1950’ என்ற எண்ணுக்கு தினமும் 4,000-க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் இந்த புகார் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டுகிறது. வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான அழைப்புகள் அதிகம் வருகின்றன. இதற்காக 3 ஷிப்ட்களில் 100 பேர் பணியாற்றுகின்றனர். இது தவிர, வாட்ஸ்அப் மூலம் 532 புகார்கள், இதர சமூக ஊடகங்கள் மூலம் 4,847 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 3,586 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தணிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டதில், 95 சதவீத தொகை மீண்டும் அவரவரிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டுவிட்டது. வணிகர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ஊதியத்தை, அரசியல் கட்சி சார்புடைய பணி தள பொறுப்பாளர் வழங்குவதாக புகார் வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை, பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே ஊதியம் செலுத்தப்படுகிறது. இருப்பினும், நேரடியாக ஊதியம் வழங்குவதாக இருந்தால், அரசு அதிகாரிகளே வழங்க வேண்டும். கட்சி சார்புடைய பொறுப்பாளர்கள் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.