

திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும். மீண்டும் அவர்களை பணிநீக்கம் செய்ய முடியாத அளவுக்கு சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்படும் என்று திமுக பொருளா ளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நமக்கு நாமே பயணத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் மக்கள் நலப் பணியாளர்களை நேற்று சந்தித்த ஸ்டாலின், அவர்களிடம் பேசியது: 1989-ல் திமுக ஆட்சியில்தான் 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதற்கான திட்டம் உருவானது. அதன் பின்னர் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல் லாம் அவர்களை பணிநீக்கம் செய்வதும், திமுக ஆட்சியில் மீண்டும் பணி வழங்குவதும் தொடர்கிறது.
தற்போதைய அதிமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்ததை உச்ச நீதிமன்றம் கண்டித்ததுடன், அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டுமென 2014 ஆகஸ்ட் 19-ல் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இதுவரை அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, இந்தப் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு வாபஸ் பெறப்படும். மேலும், அதற்கடுத்து எந்த ஆட்சி வந்தாலும், மக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய முடியாத அளவுக்கு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு, பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
அதிமுகவின் மோசமான ஆட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை மீட்க, தேர்தல்தான் ஒரே வாய்ப்பு. இன்னும் 70 நாட்களில் தற்போதைய நிலை மாறும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “பல வழக்குகளில் அதிமுக அரசை உச்ச, உயர் நீதிமன்றங்கள் கண்டித்துள்ளன. 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுவோருக்கு, தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கண்காணிப்பில் ஊதியம் வழங்க வேண்டுமென திமுக வழக்கறிஞர் அணி சார்பில் டெல்லியிலும், தமிழகத்திலும் உள்ள தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அமைச்சர்களைப் பற்றி தினமும் ஏதாவது தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் என்னென்ன வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.