தண்ணீர் கூட பருகாமல் 105 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த மூதாட்டி

தண்ணீர் கூட பருகாமல் 105 நாட்கள் உண்ணாநோன்பு இருந்த மூதாட்டி
Updated on
2 min read

தண்ணீர் கூட பருகாமல் 105 நாட் களாக உண்ணாநோன்பு இருந்த சேலத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, இயற்கை சக்தியை உணவாகக் கொண்டு உயிர் வாழ முடியும் என்று தெரிவித்துள்ளார்.

சேலம் நியூ பேர்லேன்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் இயற்கை மருத்துவ ஆராய்ச்சியாளர் சுபாஷ். இவரது மனைவி எஸ்.பரிமளா (70). இவர், தண்ணீர் கூட பருகாமல் 105 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து, நேற்று குடிநீர் அருந்தி உண்ணாநோன்பை நிறைவு செய் தார். இதற்கான விழா சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்தது. சேலம் சண்முகா மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

உண்ணாநோன்பு குறித்து எஸ்.பரிமளம் கூறியதாவது:

அஞ்சல் துறையில் உதவி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றேன். என்னு டைய கணவர் சுபாஷ், இயற்கை மருத்துவம் தொடர்பாக 26 ஆண்டு களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள் ளார். உணவு, குடிநீர் இன்றி காற்றை மட்டும் சுவாசித்து மனித னால் ஆரோக்கியமாக உயிர்வாழ முடியும் என்பதுதான் அவர் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சி.

கணவரின் ஆராய்ச்சியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். 1993-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 1994-ம் ஆண்டு ஜனவரி வரை 125 நாட்கள் வாழைப்பழம், தேங்காய் ஆகியவற்றை மட்டுமே உணவாக உட்கொண்டேன். 1994-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2002 அக்டோபர் வரை 8 ஆண்டுகள் பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டேன். இதில், 2000-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2001 ஜனவரி 23 வரை 34 நாட்கள் இளநீரை மட்டும் உணவாக எடுத் துக்கொண்டேன்.

இதன்பின்னர் குடிநீரை மட்டும் பருகி 3 நாட்கள், 7 நாட்கள், 11 நாட் கள் என படிப்படியாக 45 நாட்கள் வரை நோன்பில் இருந்தேன். கடந்த ஆண்டு நவம்பர் 30 முதல் இந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி (நேற்று) வரை 105 நாட்கள் குடிநீர், உணவின்றி இருந்து உண்ணா நோன்பை இன்று முடித்துக்கொண் டேன்.

இந்த 105 நாட்களிலும் தினமும் சமையல் உள்ளிட்ட வீட்டுப் பணிகளை இயல்பாக செய்து வந்தேன். தினமும் காலை, மாலை வேளை களில் அரைமணி நேரம் சூரிய ஒளியில் அமர்ந்து, அதன் சக்தியை உள்வாங்கிக்கொண்டேன். தினமும் யோகா பயிற்சிகளை செய்து வந்தேன். வெளியூர்களுக் கும் பிரயாணம் செய்தேன். எனக்கு களைப்பு ஏதும் ஏற்படவில்லை.

இப்போது குடிநீர் அருந்திய போது, அதனை விழுங்குவது சற்று சிரமமாக இருந்தது. இந்த ஆராய்ச்சியின்போது எனது எடை 65 கிலோவில் இருந்து 51 கிலோவாக குறைந்துவிட்டது.

இந்த ஆராய்ச்சி மூலமாக நான் கூற விரும்புவது, பஞ்ச பூதங்களான காற்று, நீர், சூரியன், மண், ஆகாயம் ஆகியவற்றில் இயற்கையாக கிடைப்பவற்றை உண்டு உயிர் வாழ முடியும் என்பதைத்தான். குறிப்பாக காற்று, சூரிய சக்தி, ஆகாய சக்தி இம்மூன்றும் உணவாக அமைந்து, நம் உயிரை பாதுகாக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுபாஷ் கூறும்போது, “உண்ணா நோன்பு இருந்த காலத்தில் பரிமளாவுக்கு ரத்தம், சிறுநீர், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவை இயல்பான அளவில் இருந்தன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in