Last Updated : 22 Jun, 2014 12:45 PM

 

Published : 22 Jun 2014 12:45 PM
Last Updated : 22 Jun 2014 12:45 PM

முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழு: மோடி ஆட்சியில் தமிழகத்துக்கு முதல் வெற்றி

முல்லை பெரியாறு அணையை நிர்வகிக்கும் மேற்பார்வைக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது, மத்தியில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளில் தமிழகத்துக்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றியாக கருதப்படுகிறது.

காவிரி நதிநீருக்காக கர்நாடகத்துடன் போராடி வருவதுபோல், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரளாவுடனும் தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அதை ஏற்க கேரள அரசு மறுத்து வருகிறது. இதனால்,136 அடிக்கும் அதிகமாக தண்ணீரை தேக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த மே 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை உறுதி செய்வதற்கு ஒரு மேற்பார்வைக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டது. அதில் தமிழகம், கேரளம் சார்பில் தலா ஒரு அதிகாரியும், மத்திய அரசு தரப்பில் இருந்து ஒரு அதிகாரியும் இடம்பெறுவர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பு வந்ததுமே மேற்பார்வைக் குழுவுக்கான தமிழக பிரதிநிதியாக, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியனை மாநில அரசு உடனடியாக நியமித்து உத்தர விட்டது. மேலும், கேரள மற்றும் மத்திய அரசுப் பிரதிநிதிகளை உடனே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கும் கடிதமும் எழுதப்பட்டது.

இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடியும் ஜெயலலிதாவும் நீண்டகாலமாக நட்பு பாராட்டி வருவதால் மத்திய, மாநில அரசுகளிடையே முந்தைய ஆட்சிபோல் மோதல் போக்கு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் பேட்டி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையை நிர்வகிக்க மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மோடி ஆட்சியில் தமிழகத்துக்கு சாதகமாக கிடைத்த முதல் வெற்றியாக இதை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர், “தமிழகத்துக்கு ஆதரவான நிலையையே மோடி கொண்டிருக்கிறார். அதை வெளிப்படுத்தும் வகையில் எடுத்த முதல் நடவடிக்கைதான் முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவுக்கு அனுமதி அளித்திருப்பது. மோடி ஜெயலலிதா நட்பு காரணமாக தமிழகத்துக்கு இதுபோல பல சாதகமான முடிவுகளை எதிர்பார்க்கலாம்” என்றார்.

தமிழக அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இதை நிச்சயம் ஒரு வெற்றியாக கருதலாம். ஏனெனில், இக்குழுவுக்குத்தான் உச்ச நீதிமன்றம் முழு அதிகாரம் அளித்திருக்கிறது. இதனால், அணையின் நீர்மட்டமும் விரைவில் உயர்த்தப்படும் நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தமிழக அரசு பிரதிநிதி சாய்குமார்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியா னதுமே முல்லை பெரியாறு அணை மேற்பார்வைக் குழு உறுப்பினராக காவிரி தொழில்நுட்பக்குழுத் தலைவர் சுப்பிரமணியனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையே, தமிழக அரசின் பிரதிநிதியாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் சாய்கு மாரை கடந்த மாத இறுதியில் அரசு நியமித்துள்ளது. இதை தலைமைச் செயலக வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x