

புதுச்சேரியில் கடந்த 2012ம் ஆண்டுக்குப் பிறகு 9 ஆண்டுகளாக மக்கள் முன்பு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடத்தப்படவில்லை.
அதிகாரிகள் உறுதி மொழி எடுப்பதை மட்டும் கடைப்பிடிப்பதை விடுத்து பழைய முறைப்படி பொதுவில் இந்நிகழ்வை நடத்தக்கோரி மத்திய அரசு தொடங்கி தலைமைச் செயலர் வரை மனு தந்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
நடப்பாண்டு அக்டோர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. மக்கள் நேரடியாக அரசுத்துறைகளை அணுகி கூட்டத்தில் புகார்களை தெரிவித்து நிவர்த்தி செய்வது வழக்கம்.
ஆனால், புதுச்சேரியில் மக்கள் முன்பாக அனைத்து துறைகளிலும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் கடந்த 2012ம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்படவில்லை
லஞ்ச ஒழிப்பு வார உறுதி மொழியை அரசு அலுவலகங்களில் முக்கிய துறைகளில் உறுதி மொழி ஏற்பதுடன் நிகழ்வு நிறைவடைந்து வருகிறது.
மக்கள் மத்தியில் லஞ்ச ஒழிப்பு வாரத்தை நடத்தக்கோரி மத்திய அரசு தொடங்கி தலைமைச்செயலர் வரை மனு தந்தும் பலனில்லை. 9வது ஆண்டாக இம்முறையும் மக்கள் முன்பு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடத்தப்படவில்லை.
இதுபற்றி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, புதுச்சேரி மாநில மாணவர், பெற்றோர் நலவாழ்வு சங்கத்தலைவர் பாலா உள்பட பல சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "பொதுமக்கள் பங்களிப்புடன் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளது. வெளிப்படை நிர்வாகம், ஊழலற்ற பணி தேவைகளை மக்களுக்கு புதுச்சேரி அரசு துறை நிர்வாகம் அளித்திட இக்கூட்டத்தை நடத்த வேண்டும். கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஊழல்கள் களையப்பட்டு 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதனால் அரசுக்கு கூடுதல் நிதி வருவாய் கிடைத்தது. நிதி கசிவு தடுக்கப்பட்டது. அரசின் அனைத்து துறைகளிலும் வெளிப்படை தன்மை ஏற்பட்டது. 9வது ஆண்டாக இம்முறையும் மக்கள் முன்பு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படாதது வருத்தமளிக்கிறது.மத்திய ஊழல் தடுப்பு ஆணைய பரிந்துரைப்படி புதுவையில் இக்கூட்டத்தை நடத்துவது அவசியம்" என்று தெரிவித்தனர்.
நிர்வாகம் செம்மையாக நடந்தால் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தாமல் அதிகாரிகள் புறக்கணிப்பது ஏன் என்பதும் மக்களின் கேள்வியாக உள்ளது.