

பேரறிவாளனுக்கு 6வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பேரறிவாளன். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி சார்பிலும், சில அமைப்புகள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் சிறுநீரகத் தொற்று, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததைத் தொடர்ந்து, அவருக்கு 1 மாதம் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று கடந்த மே 28-ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் இருந்து ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். மேலும், மருத்துவ சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று அவர் சிகிச்சை பெற்று வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பேரறிவாளன் தினமும் கையெழுத்திட்டும் வந்தார்.
1 மாத காலம் பரோல் முடிந்து கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி சிறைக்குத் திரும்ப இருந்த பேரறிவாளனுக்குத் தமிழக அரசு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டது. அதேபோல, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் எனத் தொடர்ந்து 5 முறை பேரறிவாளனுக்கு பரோல் நீடிக்கப்பட்டது.
1 மாதம் பரோலில் வந்த பேரறிவாளனுக்குக் கிட்டத்தட்ட 150 நாட்களுக்கு பரோல் நீtடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அக்டோபர் மாதம் 26-ம் தேதியுடன் பரோல் முடிவடைந்ததால், இன்று பேரறிவாளன் சிறைக்குத் திரும்பத் தேவையான ஏற்பாடுகளைக் காவல்துறையினர் செய்து வந்தனர். பாதுகாப்பு வாகனங்கள் அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு பேரறிவாளன் சிறைக்குத் திரும்பத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாதுகாப்பு காவலர்கள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், தமிழக அரசு பேரறிவாளனுக்கு 6-வது முறையாக பரோலை நீட்டித்து இன்று காலை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பேரறிவாளன் வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழக்கம்போல் தொடர்ந்தன. கடந்த வாரம் சிறுநீரகத் தொற்று காரணமாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.
இதனால், அவரது உடல்நிலை கருதி மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு தொடர்ந்து நடந்து வருவதால், அவரது வீட்டின் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்டக் காவல்துறையினர் செய்து தர வேண்டும் என பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரறிவாளனின் உடல்நிலையைக் கருதி மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கிய தமிழக அரசுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.