

அலுவல் ரீதியான கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்குத் தமிழக அரசின் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்துத் தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத் திரட்டி வைத்துக் கொள்ளுமாறு அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி, பேசுபொருளானது.
இந்நிலையில் இதுகுறித்துத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று வெளியிட்ட அறிக்கை:
''அலுவல் ரீதியாகத் துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன்.
தமிழ்நாட்டுக்கு ஆளுநர் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்குத் தமிழக அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்துத் தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத் திரட்டி வைத்துக் கொள்ளுமாறு அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அலுவல் ரீதியான ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன். திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து இதுபோல் தகவல்களைத் திரட்டி வைத்துக்கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானதுதான்.
அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றுதான் என்பது தெரியும்''.
இவ்வாறு தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.