

ஆனைவாரி அருவியில் வெள்ளத்தில் சிக்கிய தாயையும், சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆத்தூரை அடுத்துள்ள ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலாத் தலம் வனத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தின் குற்றாலம் எனப்படும் இந்த அருவி, கல்வராயன் மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தச் சுற்றுலாத் தலத்துக்கு, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்படாமல் உள்ளதால், இந்தச் சுற்றுலாத் தலத்துக்கு ஏராளமானோர் வருகின்றனர்.
இதனிடையே, வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் தினந்தோறும் ஆங்காங்கே மழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்கிறது. கல்வராயன் மலைப் பகுதிகளிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், ஆனைவாரி அருவியில், தற்போது வழக்கத்தை விட அதிகமாக நீர் கொட்டுகிறது.
அருவியில் நேற்று முன்தினம் (அக். 24) மாலையில் பலர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், செந்நிறத்தில் நீர் கொட்ட ஆரம்பித்தது. இதனைக் கவனித்த வனத்துறையினர், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்தினர்.
ஆனால், திடீரென வெள்ளம் பெருக்கெடுத்ததால், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்களில் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் உள்பட 5 பேர் அருவியின் மறு கரையில் ஒதுங்கினர். வெள்ளம் அதிகரித்ததால், அவர்களில் இருவர் அங்கிருந்த பாறை மீது ஏறி, குழந்தை, பெண் ஆகியோரை மீட்டனர். மற்ற இருவர் பாறை மீது ஏற முயன்றபோது, தவறி வெள்ளித்தில் விழுந்தனர். சிறிது தூரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் சற்று தூரத்தில் கரை ஒதுங்கித் தப்பித்தனர்.
இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை சிலர் மீட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக். 26) தன் ட்விட்டர் பக்கத்தில், "தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்கத் துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்" எனப் பதிவிட்டுள்ளார்.